Published : 17 Jul 2017 08:19 PM
Last Updated : 17 Jul 2017 08:19 PM

ஆனைகட்டியை போல் தனி சோதனைச் சாவடி ஏற்படுமா?- பட்டிசாலை போலீஸார் எதிர்பார்ப்பு

கோவை மாவட்டத்தில் வாளையாறு, நடுப்புணி, வேலந்தாவளம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், ஆனைகட்டி, முள்ளி, பட்டிசாலை உள்ளிட்ட பல பகுதிகள் தமிழக-கேரளத்தின் முக்கிய எல்லைப் பகுதியாக விளங்குகிறது. இதில் மாங்கரை வழியே உள்ள ஆனைகட்டி, தோலம்பாளையம், காரமடை வழியே செல்லும் முள்ளி, பட்டிசாலை போன்ற எல்லையோரங்கள் மாவோயிஸ்டுகள் மற்றும் பல்வேறு தீவிரவாதக்குழுக்களுக்கு வழித்தடமாக விளங்குகிறது.

எனவே இப்பகுதிகளில் கேரள - தமிழக போலீஸார் மற்றும் வனத்துறையினர் கடந்த 3 ஆண்டுகளாகவே வாகனச் சோதனைகளையும், மலை கிராமத்து மக்களிடம் தொடர் விசாரணையையும் மேற்கொண்டுள்ளனர். அட்டப்பாடி காடுகளில் சைலண்ட் வேலி பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கி சண்டை, வனத்துறை சோதனைச் சாவடி எரிப்பு ஆகிய சம்பவங்களின் காரணமாக இருமாநில போலீஸாரும் சிறப்பு அதிரடிப்படையினரும் இரவு பகலாக இக்காடுகளில் ரோந்து செல்கின்றனர்.

தமிழக போலீஸாரை பொறுத்தவரை 80 பேர் கொண்ட அதிரடிப்படையினர் குழு ஆனைகட்டி மாங்கரை பகுதிகளில் தங்கி, இரு குழுக்களாக பிரிந்து காடுகளுக்குள் சென்று புதிய நபர்கள் குறித்த நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். அத்துடன் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் 12 மணிநேரம் கொண்ட ஒரு ஷிப்ட்டுக்கு 8 போலீஸார் வீதம் காவல் புரிகின்றனர். கோவை ஆனைகட்டி வழித்தடத்தை பொறுத்தவரை மாங்கரையில் மட்டுமே சோதனைச்சாவடி இருந்தது. இங்கிருந்து 10கிலோமீட்டர் ஆனைகட்டியில் இருந்த மதுக்கடை இரு மாநில பிரச்சனையாக - போராட்டமாக வெடிக்க, அதில் மாவோயிஸ்டுகளின் தூண்டுதலும் இருந்ததாக சொல்லப்பட்டது.

எனவே மாங்கரை சோதனைச் சாவடி போலீஸார் ஆனைகட்டிக்கு சென்று பணிபுரிந்தனர். கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக இங்கே தற்காலிக கட்டிடம் ஒன்றிலேயே பணிபுரிந்த போலீஸாருக்கு சில வாரங்களுக்கு முன்புதான் சொந்தமாக கட்டிடம் ஒதுக்கப்பட்டது. அதே சமயம் மாங்கரை சோதனைச் சாவடியிலும் போலீஸார் வழக்கம் போல எண்ணிக்கை அடிப்படையில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் காரமடை, தோலம்பாளையம், மேல்பாவி வழியே உள்ள பட்டிசாலையிலும் போலீஸாருக்கு சோதனைச் சாவடி ஏற்படுத்தப்பட்டு வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

இங்கே போலீஸாருக்கு தனியாக சோதனைச் சாவடி இல்லாததால் அவர்கள் இங்குள்ள வனத்துறை சாவடியிலேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் அவர்கள் இரவு நேரங்களில் பணிபுரிவதே பெரிய சோதனையாக உள்ளது. தவிர மாங்கரை, முள்ளி, ஆனைகட்டியை விடவும் காட்டுக்குள் உள்ளடங்கியிருக்கும் பட்டிசாலையிலேயே தற்போதெல்லாம் அதிகமான இரு மாநில வாகனங்கள் செல்கின்றன. எனவே இங்கே போலீஸாருக்கு தனியாக ஒரு சோதனைச் சாவடி கட்டிடம் ஏற்படுத்துவது அவசியம் என்கிறார்கள் இங்கு பணியாற்றும் போலீஸார்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ''ஆனைகட்டியில் போலீஸாருக்கு சோதனைச் சாவடி ஏற்படுத்தப்பட்ட காலகட்டத்தில்தான் இங்கும் சோதனைச் சாவடி கொண்டு வரப்பட்டது. தினசரி ஷிப்ட் முறையில் பணியாற்றுகிறோம். மாங்கரை, ஆனைகட்டி சோதனைச் சாவடியை பொறுத்தவரை துடியலூர் காவல்நிலையத்தை சேர்ந்தவர்கள். பட்டிசாலையில் உள்ள போலீஸார் காரமடை காவல்நிலையத்திற்குள் வருபவர்கள். ஆனைகட்டியில் சோதனைச்சாவடி ஏற்படுத்தப்பட்டது போல் இங்கும் தனி சாவடி ஏற்படுத்தப் பட்டால் பாதுகாப்பாக இருக்கும். மேலும் வனத்துறையினரும் இயல்பாக அவர்களுக்கான கட்டிடத்தில் பணிபுரிவார்கள். அதிகாரிகளிடம் அதை தெரிவித்துள்ளோம். ஏற்பாடு செய்து தருவதாக சொல்லியிருக்கிறார்கள்!'' என்றனர்.

கோவையில் அஸ்ஸாம் பிரிவினை வாதிகள் (போடோ லேண்ட் தேசிய ஜனநாயக முன்னணி அமைப்பினர்) 2 பேர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டதையடுத்து, சிறப்பு அதிரடிப்படை போலீஸாரின் கவனம் தற்போது கேரள எல்லைக்காடுகளில் பதிந்துள்ளது.

மாவோயிஸ்டுகள் மட்டுமல்லாது, வேறு தீவிரவாத இயக்கத்தினரும் பட்டி சாலை, சீங்குழி, கோபனாரி, முள்ளி, பனப்பள்ளி உள்ளிட்ட மலை கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களிடம் கடந்த 2 நாட்களாக தென்பட்ட அந்நிய நபர்கள் குறித்த விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதே போல் சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x