Published : 29 Jul 2017 12:49 PM
Last Updated : 29 Jul 2017 12:49 PM

இன்று சர்வதேச புலிகள் தினம்: புலிகளுடைய வாழ்வாதாரங்கள் அழிவில் இருந்து மீட்டெடுக்கப்படுமா?

புலியைக் கண்டால் எல்லோருக்கும் ‘கிலி’ ஏற்பட்டது அந்த காலம். ஆனால் இப்போது எல்லாம் தலைகீழாகிவிட்டது. இன்று மனிதனைக் கண்டு புலிகள் அஞ்சி ஓடுகிற நிலமை ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மனிதர்கள் புலிகளை வேட்டையாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

20-வது நூற்றாண்டு ஆரம்ப காலத்தில் ஆசியாவில் மேற்கே துருக்கியில் தொடங்கி ஆசியாவின் கிழக்கு எல்லை வரை பல நாடுகளிலும் எட்டு வகை புலிகள் இருந்தன. அதில், தற்போது பாலி இனம், காஸ்பியன் இனம் மற்றும் ஜாவன் இனம் முற்றிலும் அழிந்து விட்டது. இந்திய இனம் (ராயல் பெங்கால் புலிகள்) இந்தோசீனா இனம், சுமித்திரன் இனம், சைபீரியன் இனம் மற்றும் தெற்கு சீன இனம் ஆகியவைகளே எஞ்சியுள்ளன. இந்த இனங்களில் தற்போது 4,600 முதல் 7,200 புலிகள் மட்டுமே உலக காடுகளில் உள்ளன.

சர்வதேச அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் இந்திய இனமான ராயல் பெங்கால் புலிகள் 60 சதவீதம் உள்ளன. இதில் இந்திய காடுகளில் மட்டுமே 70 சதவீத ராயல் பெங்கால் டைகர் காணப்படுகின்றன. 20-ம் நூற்றாண் டின் தொடக்கத்தில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது.

அதன்பின் புலிகள் வாழ்விடம் அழிக்கப்பட்டதாலும் அவை வேட்டையாடப்பட்டதாலும் இந்தியாவின் பாரம்பரிய ராயல் பெங்கால் புலிகள் எண்ணிக்கை குறைந்து விட்டன. காடுகளின் செழிப்பு அங்கு வாழும் புலிகளின் எண்ணிக்கையை வைத்தே புரிந்து கொள்ளப்படுகிறது.

காட்டில் புலிகள் செழிப்பாக வாழ்கின்றன என்றால் அங்கு அவை விரும்பி தின்னும் மான்கள் செழித்திருக்கின்றன என்பதும், மான்கள் செழித்து வாழ்கின்றன எனில் அவை விருப்பித்தின்னும் புற்கள் செழித்திருக்கின்றன என்பதும், புற்கள் செழித்திருக்கின்றன எனில் சரியான அளவு மழை பெய்கின்றன என்பதும் ஒரு வனத்தின் செழிப்பு குறியீடாக கருதப்படுகிறது.

ஒரு காட்டிலிருந்து புலிகள் வெளியேறுகின்றன எனில் அக்காடு மோசமாக மாறி வருகின்றது எனப்பொருள் கொள்ளலாம். தற்போது இந்தியாவில் புலிகள் இனம் அழிந்து வருவது, நாட்டின் வளர்ச்சிக்கும், காடுகள் மோசமாக இருப்பதை சுட்டிக்காட்டுவதாகவும் வன ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

venkateshjpgவெங்கடேஷ்

இதுகுறித்து வன ஆர்வலரும், மாவட்ட வன அலுவலருமான வெங்கடேஷிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘‘வேட்டையாடுதல், பெருகி வரும் மக்கள் தொகையால் காடுகள் அழிக்கப்படுவதால் உண்ண தாவரங்கள் இன்றி மான் போன்ற புலிகளுக்கான இரைகள் அழிவது புலிகளின் எண்ணிக்கை குறைவுக்கு முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன. முன்பு புலிகள் எண்ணிக்கை குறைந்தது உண்மைதான்.

ஆனால், இப்போது அப்படியில்லை, எண்ணிக்கை கூடி வருகிறது. 2006-ம் ஆண்டு இந்தியாவில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு மூலம் 1,411 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 2010-ல் கணக்கிடப்பட்டதில் 1706 புலிகளும், 2014-ல் 2226 புலிகளும் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது வனத்துறை புலிகள் பாதுகாப்பில் முக்கிய பங்கெடுத்து வருவதன் மூலம் புலிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு வருகிறது. இந்தியக் காடுகளில் கர்நாடக மாநிலத்தில் உள்ள காடுகளில்தான் அதிக புலிகள் வசித்து வருகின்றன (406). தமிழகத்தில் 229 புலிகள் உள்ளன, இந்திய அளவில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது என்றார் அவர்.

புலிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சட்ட பொதுக்குழு கூட்டம் 1969-ல் டெல்லியில் நடைபெற்றபோது இந்தியாவில் புலிகள் உள்பட பல உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என அறிவுறுத்தப்பட்டது. இதற்கான நடவடிக்கையாக, இந்திய வன விலங்குகள் வாரியத்தின் ஆலோசனையின் அடிப்படையில் 1970-ல் வன விலங்கு வேட்டையாடல் முதலில் தடை செய்யப்பட்டது. 1972-ல் வன விலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.

குறிப்பாக புலிகளை பாதுகாக்க 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று உத்ராஞ்சல் மாவட்டத்திலுள்ள கார்பெட் தேசிய பூங்காவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ப்ராஜெக்ட் டைகர் (புலிகள் திட்டம்) என்னும் திட்டத்தை தொடங்கி வைத்தார். புலிகளுக்கான வாழ்வாதாரங்களை தூய்மை கெடாமல் மீட்டெடுப்பதே இந்த திட்டத்தின் குறிக்கோள் என்றார் வெங்கடேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x