Published : 02 Jul 2017 04:39 PM
Last Updated : 02 Jul 2017 04:39 PM
ஒரு சின்ன சந்து. ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒவ்வொருவராக செல்கிறார்கள். அவர்களுக்குப் பின்னே கடைசியாக ஒருவர் பையில் பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்புகிறார். அவருக்குப் பின்னால் திடீரென்று க யானை போன்று பெரிய உருவத்தில் வருகிறது அந்தக் காட்டு மாடு. ஒரே முட்டு. ஒரே தூக்கு. முதல் கொம்பில் சிக்கியவரை இன்னொரு கொம்புக்கு மாற்றி குத்தி ஒரு வீசு வீசிவிட்டு சாவகாசமாக செல்கிறது. மற்றவர்கள் மிரண்டு ஓடுகிறார்கள்.
காட்டு மாட்டால் குத்துப்பட்டவர் மருத்துவமனைக்கு கொண்டு போகும் வழியிலேயே மரணம் அடைந்திருக்கிறார். இப்படியொரு கோர சம்பவம் நேற்று மதியம் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை கிராமத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவப்பதிவு அப்பகுதியில் உள்ள கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது ஊரெல்லாம் சமூக வலைதளங்களில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
பொழுது விடிந்தால் காக்கா,குருவிகள் சத்தம் எழுப்புவதும், அவற்றை தரிசிப்பதும் பொதுவான இயல்பு. ஆனால் நீலகிரியில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் பகுதிகளிலும் கூட விடியற்காலை வீட்டின் கதவைத் திறந்தால் காட்டு மாடுகளில்தான் (INDIAN GOUR) விழிக்க வேண்டியுள்ளதாக சொல்லுகிறார்கள் மக்கள்.
அது மட்டுமா? தேயிலை பறிக்கும் இடங்களில், சாலைகளில், குப்பை மேடுகளில், சுடுகாடுகளில், வார, தினசரி சந்தைகளில், பேருந்து நிலையங்களில் என அங்கிங்கெணாதபடி சுற்றித்திரிகின்றன. இருட்டில் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் மலை மாதிரி படுத்திருக்கும் காட்டு மாடுகள் மோதி அடிபடுவதும், தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும்போது பின்பக்கமாக வந்து அவை முட்டித்தள்ளுவதும் நிறைய விபத்துகளும் நடக்கின்றன.
இந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் 7 பேர் வரை இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கடந்த 5-ம்தேதி கேத்தி பகுதியில் ரயில் தண்டவாளத்தை தாண்டிய மைதீன் (63 வயது) என்ற கூலித்தொழிலாளியை துரத்திய காட்டு மாடு முட்டித் தள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து அங்குள்ள மரக்கிளையை பிடித்துக் கொண்டு தொங்கினார். அதைப் பார்த்து மாடு மீண்டும் அவரை முட்டித் தள்ள எகிற, அந்தப் பள்ளத்திலேயே விழுந்து இறந்தது. மாடு முட்டிய தொழிலாளி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதற்கு 2 நாள் கழித்து தூணேறி கிராமத்தில் ருக்குமணி (60 வயது) என்பவர் காட்டு மாடு முட்டி கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் அணையட்டி, தாந்தநாடு, மசலகல், கன்னேறி முகடு, கேர்பன், மைநிலை, கட்டபெட்டு, கொலக்கம்பை, எல்லநள்ளி, மஞ்சூர், மஞ்சக்கொம்பை, அன்னமலை, குந்தா, கெத்தை, மஞ்சன கொரை, கொள்ளிமலை, குந்தா கோத்தகிரி, காத்தாடி மட்டம், தொட்டபெட்டா, மடித்தொரை, பேரார், புடியங்கி, கெட்டி கம்பை, உயிலடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடந்துள்ளது.
இந்த காட்டுமாடுகள் எப்படியெல்லாம் குப்பை பொறுக்குகின்றன. வீடுகளின் வேலிகளைத் தாண்டுகிறது. சுடுகாட்டில் மேய்கிறது. ஒன்றுக்கொன்று சண்டையிடுகிறது. காடுகளில் தனக்கு உணவு கிடைக்காமல் ஊருக்குள் வந்து பேரிக்காய், பூச்செடிகள் உட்பட எல்லாவற்றையும் எப்படியெல்லாம் சாப்பிடுகிறது. இதனால் குத்துபடும் மனிதர்கள். அவதிப்படும் மக்கள் என சகலத்தையும் புகைப்படங்கள் எடுத்து சமீபத்தில் அரசு 31 நாட்கள் நடத்திய கோடைவிழாவில் விழிப்புணர்வு கண்காட்சியாகவே மக்கள் பார்வைக்கு வைத்திருந்தார் கோத்தகிரியை சேர்ந்த வி.மதிமாறன்.
அதைப் பற்றி கடந்த வாரம் 'தி இந்து'வில் செய்தி விரிவாக வெளியிட்டோம். அந்த காட்டு மாடுகள் ஊருக்குள் நுழைந்து செய்யும் சேஷ்டைகளை விளக்கும் புகைப்படங்களையும் நம் 'தி இந்து' இணையதளத்தில் ஆல்பமாக வெளியிட்டோம். அதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நேற்று நடக்க நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இதைப் பற்றியே மக்களிடம் பரபரப்பு பேச்சு.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கொலக்கம்பைவாசிகள், ''முன்பெல்லாம் இங்கே காட்டு யானைகள் மிகுதியாக இருந்தன. அவற்றால் மக்கள் வெகு துன்பப்பட்டனர். பலர் யானைகளால் மிதிபட்டு இறந்தும் உள்ளனர். அதேபோல் இங்கே கரடிகளும் அதிகம். கொலக்கம்பை என்றாலே பலருக்கும் கரடி நியாபகம்தான் வரும். அந்த அளவுக்கு கரடிகள் தாக்கி சிலர் இறந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். என்றாலும் அவர்கள் முகம் கரடி அடித்ததில் அகோரமாகி இருப்பதை காணமுடியும்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தொல்லை இருக்கிறது என்றால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இந்த காட்டுமாடுகள் தொல்லை. வீட்டில் தோட்டத்தில், எஸ்டேட்டுகளில் எங்கே போனாலும் முப்பது, நாற்பது காட்டு மாடுகள் சுற்றித்திரிகின்றன. அப்படித்தான் ரேஷன் கடைக்கும் இந்த காட்டு மாடு உலாவிக் கொண்டிருந்தது. அது சாதுவான பிராணி போலத்தான் இருக்கும். ஆனால் அது போகிற வழியில் யார் தென்பட்டாலும் உடனே முட்டித்தூக்கி வீசிவிடும்.
தற்போது காட்டுமாடு முட்டித் தூக்கி வீசப்பட்ட ராதாகிருஷ்ணனுக்கு வயது 65. கால் கொஞ்சம் ஊனம். வெள்ளை சட்டை அணிந்திருந்தார். அந்த வழியில் சந்துக்குள் வந்த காட்டுமாடுக்கு என்ன தோன்றியதோ குத்தி தூக்கி வீசி விட்டது. இதுபோல இன்னும் எத்தனை பேரை இந்த காட்டு மாடுகள் தூக்கி எறியுமோ கொல்லுமோ தெரியவில்லை!'' என்றனர்.
தற்போது காட்டு மாடு முட்டி இறந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கோரி மக்கள் கோரிக்கை வைப்பதோடு, காட்டு மாடுகளை நிரந்தரமாக காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றனர் நீலகிரி மக்கள்.
இது எந்த நேரமும் போராட்டமாக வெடிக்கலாம் என்பதால் காட்டு மாடுகளை துரத்தி விடும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர் வனத்துறையினர். இது தற்காலிகமானதாக இருக்கக் கூடாது. நிரந்தரமாக இருத்தல் வேண்டும் என கோருகின்றனர் மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT