Last Updated : 03 Jul, 2017 02:50 PM

 

Published : 03 Jul 2017 02:50 PM
Last Updated : 03 Jul 2017 02:50 PM

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனு தள்ளுபடி

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு இடங்களில் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிராக எதிர்கட்சிகளின் தூண்டுதல் பேரில் மாநிலம் முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் புதிதாக திறக்கப்பட்ட மதுபான கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த மதுபானங்களை தரையில் கொட்டி அழித்துள்ளனர். சில இடங்களில் மதுபான கடைகளுக்கு தீ வைத்து சட்டத்தை கையில் எடுத்து வன்முறையில் இறங்கியுள்ளனர்.

இப்போராட்டம் காரணமாக பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படுகி்ன்றன. அரசு பணம் விரையமாகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை. டாஸ்மாக் கடையை மூட சட்டப்படி பரிகாரம் தேடாமல், வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல. எனவே டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பெண்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, பெண் போராட்டக்காரர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க கோருவது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பெண்களை முன்நிறுத்தியே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என மனுதாரர் தெரிவித்தார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி வாதிடும்போது, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளை யார் நடத்துகிறார்கள், அந்த வருவாய் எங்கு போகிறது என்பது எல்லோருக்கும் தெரியும், போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரரின் மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x