Published : 21 Jul 2017 11:00 AM
Last Updated : 21 Jul 2017 11:00 AM
நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் களியக்காவிளையை தாண்டியதுமே நம்மை கேரளத்தின் ரம்மியம் சூழ்கிறது. சாலையின் இருபுறமும் இருக்கும் லாட்டரி சீட்டுக் கடைகள், ‘நீங்கள் மலையாள தேசம் வந்து விட்டீர்கள்’ என்கின்றன. இயற்கையை ரசித்தபடியே உதயன்குளக்கரையைக கடந்தால், அமரவிளை பேருந்து நிறுத்தம் வருகிறது. அங்கே இறங்கி 300 மீட்டர் தூரம் நடந்தால் நமக்கு வியப்பூட்டக் காத்திருக்கிறது ‘சரித்திர மாளிகை’
அந்த வளாகத்துக்குள், பழங்கால ஜமீன் வீடுகளைப் போல் முளைத்து நிற்கும் சீமை ஓட்டு வீடுகள் நம் கண்களை மிரட்டுகின்றன. அதன் கதவுகள் திறக்கப் பட்டதும் பண்டைய வரலாறுகளும் நம் கண் முன்னே காட்சிகளாய் விரிகின்றன. அமரவிளையைச் சேர்ந்த அபிலாஷ் என்ற இளைஞர்தான் இந்தச் சரித்திர மாளிகையை படைத்தவர். மாளிகையை எப்படி, ஏன் உருவாக்கினோம் என்பதை அவரே விவரிக்கிறார்.
மூதாதையர் சேர்த்த பொக்கிஷங்கள்
”திருவிதாங்கூர் சமஸ்தான தலைநகரை இரணியலில் இருந்து 1629-ல் பத்மநாபபுரத்துக்கு மாற்றினார்கள். அப்போது பத்மநாபபுரம் அரண்மனையின் அருகே அங்கோல் சுற்று மாளிகை அமைத்தார்கள். இது மன்னர் குடும்பத்தின் பிரத்யேக தேவைக்கானது. ஒருகட்டத்தில் அங்கோல் மாளிகையில் இருந்த பொருள்கள் சிதலமடைந்தது. அவற்றை ஏலம் விட்டார்கள். தொன்மை கருதி எனது மூதாதையர்கள் அவற்றை ஏலத்தில் எடுத்து, பொக்கிஷமாய் பாதுகாத்தனர். அவற்றுடன் நானும் திருவிதாங்கூர் மன்னர் காலத்து ஆவணங்களையும் சுதந்திரத்துக்கு முந்தைய அரிய பொக்கிஷங்களையும் சேகரித்தேன்.
வரலாற்று மாணவனான நான் ஒரு ஆய்வுக்காக வந்தபோது இரணியல் அரண்மனையின் பரிதாப நிலையைப் பார்த்தேன். நம்மிடம் உள்ள பொக்கிஷங்களும் அப்படி அடையாளத்தைத் தொலைத்துவிடக் கூடாது என முடிவெடுத்தேன். அதற்காகவே அமரவிளையில் இந்த இடத்தை வாங்கி, பழமை மாறாமல் இந்த மாளிகையை உருவாக்கி, அதுனுள்ளே, எங்களிடமிருந்த பொக்கிஷங்கள் அனைத்தையும் காட்சிப்படுத்தினேன்.
எட்டு ஆண்டு உழைப்பு
எட்டு ஆண்டுகள் உழைத்து 21 ஆயிரம் சதுர அடியில் இந்த மாளிகையை உருவாக்கினோம். இங்கு மொத்தம் 3,600 பழங்கால பொருள்கள் இருக்கின்றன. தொன்மையான சித்த, ஆயுர்வேத வைத்திய தகவல்கள், களரி கலை குறித்த வரலாற்று தகவல்கள் இங்கு திரட்டி வைக்கப்பட்டுள்ளன.” என்றவர் நமக்கு மாளிகையைச் சுற்றிக்காட்டினார்.
மாளிகை வளாகத்துக்குள் இரண்டு மாட்டு வண்டிகள் நிற்கின்றன. அதில் ஒன்று, காமராஜர் நாகர்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது கிராமப் பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்தது. இன்னொன்று, குளச்சல் பகுதி சுற்றுப்பயணத்தில் மகாத்மா காந்தி பயணித்தது. அந்தக் காலத்தில் காந்தி பேசிய மைக்குகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், மீனவர்கள் பயன்படுத்திய வல்லம், மனிதர்களால் இயக்கப்பட்ட எண்ணெய் செக்கு ஆகியவற்றையும் இங்கு பார்க்கலாம்.
இந்தத் தலைமுறை அறிந்திராதவை
இங்குள்ள ஆன்மிக பூமுகம் பகுதியில் எழுத்தாணி, நாராயணம் என எழுதுபொருள்கள், மற்றும் பலவகை சுவடிகள் உள்ளன. கண்ணாடிப் பெட்டியில் தராசும் வைக்கப்பட்டுள்ளது. இங்குதான் தீர்மானங்கள் எழுதப்படும். அடுத்த பகுதி தாய் பூமுகம். மன்னர் காலத்தில் வேதங்கள் ஓதும் பகுதி இது. இதற்கென பயன்படுத்தப்பட்ட புத்தக வைப்புப் பலகை, நாற்காலி என அங்கோல் சுற்று மாளிகையில் இருந்த அனைத்துப் பொருட்களும் இங்கு காணக் கிடைக்கின்றன.
திருவிதாங்கூர் அரண்மனையில் பயன்படுத்திய ஆழாக்கு, உழக்கு, நாளி, மரக்கால் உள்ளிட்ட அளவைப் பொருட்கள், வேலைப்பாடுகள் கொண்ட அம்மி, ஆட்டுக்கள் உள்ளிட்டவைளும் இங்கு வரிசைகட்டுகின்றன. சந்தனக்கட்டையால் செய்யப்பட்ட இருக்கை, இரட்டைக்கால் பீடம், அந்தக் காலத்து அஞ்சல் பெட்டிகள் என இந்தக் கால தலைமுறை அறிந்திராத பல பொருட்கள் நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வளாகத்தில் இருந்த ஒரு கிணற்றைப் பற்றியும் விவரித்தார் அபிலாஷ். “இந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துத்தான் களரி வீரர்கள் களரி நீச்சல் குளத்தை உருவாக்குவார்கள். தெக்கன் களரி ஒரு ரகசியக் கலை என்பதால் அதை ரகசிய அறை வைத்துத்தான் அந்தக் காலத்தில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதன்படியே ரகசிய அறை அமைத்தே இப்போதும் அதைச் சொல்லிக் கொடுக்கிறோம்.” என்று சொன்னவர், அங்கிருந்த குறுகலான ஒரு பொந்துக்குள் சுரங்கம் வழியாக அழைத்து செல்கிறார். அடர் இருட்டில், உடன் வந்தவரின் முகம்கூட சரியாகத் தெரியவில்லை. இப்போது ஒரு படிக்கட்டில் இறங்குகிறோம். உள்ளே ஒரு ரகசிய அறை. அதில் விளக்குகள் எரிகின்றன. இங்குதான் களரி வகுப்பு நடக்கிறது. மீண்டும் நம்மை மேலே அழைத்து வந்தவர், அங்கிருந்த மாடம் ஒன்றைக் காட்டினார். மன்னரும் அவரது குடும்பத்தினரும் மட்டும் இங்கிருந்து களரிப் பயிற்சிகளை பார்ப்பார்களாம்.
யானை பிளிறும் சத்தம்
இப்போதும் இங்கு களரி பயிற்சி நடக்கிறது. நாம் சென்று வந்த அறையில், களரி வீரர்கள் கிணற்றுத் தண்ணீரை ஒவ்வொரு குடமாகச் சுமந்து சென்று நிரப்பி நீச்சல் குளத்தை உருவாக்குகிறார்கள். இதற்கு 41 நாட்கள் பிடிக்குமாம். “களரியில் இதுவும் ஒருவகை மனப் பயிற்சி” என்று சொன்ன அபிலாஷ், வீட்டின் மேல் கூரையில் பலகை திறப்பு ஒன்றை திறக்கிறார். இது அந்தக் காலத்து வங்கி முறை. இதில் காசு போட்டால் பத்தாயப்புரையில் (தானிய சேமிப்புக் கிடங்கு) போய் விழுமாம்.
பேசிக் கொண்டே இன்னொரு சுரங்கம் செல்லும் கதவைத் திறக்கிறார் அபிலாஷ். யானை பிளிறுவதுபோல் சத்தம்! இப்படி ஒலி எழுப்பும்படி அந்தக் கதவை வடிவமைத்திருக்கிறார் தச்சர். ஓலைச் சுவடிகள், யானைப் பல், மணல் கடிகாரம், ஆதிகாலத்து டைப் ரைட்டிங் மெஷின், தூர்தர்ஷினி (தொலை நோக்கி) என இந்தச் சுரங்கத்துக்குள் எல்லை இல்லா ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.
மொத்தம் 5 சுரங்கங்கள்
சரித்திர மாளிகையில் மொத்தம் 5 சுரங்கங்கள் உள்ளன. இதில், மன்னர் காலத்து சித்த வைத்திய அறை, பிரசவம் பார்க்கப் பயன்படுத்திய அறை, இரவும், பகலும் எரிந்து கொண்டே இருக்கும் கிடா விளக்கு, எண்ணெய் தொட்டி கொண்ட சாஸ்திர புரை, மருந்து தயாரிக்கும் வாட்டி அறை மற்றும் மருந்து களை கெடாமல் பாதுகாக்கும் அறை உள்ளிட்ட வைகள் உள்ளன.
மன்னர் காலத்து பீங்கான் ஜாடியில் ஆண்டுக் கணக்கில் உப்பில் ஊறிய மாங்காய் துண்டுகளை சுவைத்தபடியே மேலும் நடக்கிறோம். அடுத்து வருகிறது மணிக் கிணறு. குடி தண்ணீருக்காக பயன்படுத்தப்படும் இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடிக்க மர கோப்பைகளையே பயன்படுத்துகிறார்கள். 64 அடி ஆழம் கொண்ட இந்தக் கிணற்றின் கீழ்ப்பகுதியில் அத்தி, இத்தி, புங்கு, புளி, பூவணம் ஆகிய 5 மரங்களை பதப்படுத்திப் போட்டிருப்பதால் மூலிகை ரசமாய் இனிக்கிறது. தண்ணீர்!
நமக்கும் அந்த மூலிகை ரசத்தை தந்தார்கள். அதை அருந்திவிட்டு அங்கிருந்து நாம் கிளம்புகையில், “இங்கே இன்னொரு ரகசிய அறை இருக்கு. அதை நாங்கள் திறக்கவே மாட்டோம். அதற்குள் ஐம்பொன் மற்றும் தங்க பாத்திரங்கள் உள்ளிட்ட விலை மதிப்பற்ற பொருட்கள் இருக்கு” என்ற சஸ்பென் ஸுடன் நமக்கு விடைகொடுத்தார் அபிலாஷ்.
அனைத்துமே மன்னர் காலத்தவை
குமரி மாவட்டம் ராமபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் கணித ஆசிரியர் ஜான் எட்வின் ராஜ். இவர்தான் விடுமுறை நாட்களில் சரித்திர மாளிகையில் களரிப் பயிற்சி ஆசான். “மன்னர் கால வழக்கப்படி இந்தத் தற்காப்புக் கலையை ரகசிய அறையில் வைத்துத்தான் சொல்லித் தருகிறோம். கத்தி, குறுந்தடி, வெட்டுக்கத்தி, இரட்டைக் கத்தி, கண்ட கோடாரி, வாள், சிலம்பம் என இங்கு பயன்படுத்தப்படும் அனைத்துமே மன்னர் காலத்தில் பயன்பாட்டில் இருந்தவைதான். இந்தத் தற்காப்பு கலைக்கு கேரள - தமிழக எல்லையோர பகுதிகளில் நல்ல வரவேற்பு உள்ளது.” என்கிறார் ஜான் எட்வின் ராஜ்.
கல்வித் துறை அங்கீகாரம்
சரித்திர மாளிகையின் வரலாற்றைத் தெரிந்து கொண்டு அதை முழுமையாகச் சுற்றிவர மூன்றரை மணி நேரம் பிடிக்கும். இந்த மாளிகையை சுற்றிப் பார்க்க சிறுவர்களுக்கு 25 ரூபாயும் பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த மாளிகையை கல்விச் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக அண்மையில் பரிந்துரை செய்திருக்கிறது கேரள கல்வித் துறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT