Published : 26 Jul 2017 11:19 AM
Last Updated : 26 Jul 2017 11:19 AM
புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ரத்த வங்கி இல்லாததால் கர்ப்பிணிகளுக்கு தேவையான ரத்ததானம் செய்ய வருவோர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று ரத்தம் தர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பிரசவங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் 1932-ம் ஆண்டு அரசு பொது மருத்துவமனையுடன், மகப்பேறு மருத்துவமனை துவக்கப்பட்டது. பின்னர் 1938-ம் ஆண்டு முதல் தனி மருத்துவமனையாக செயல்பட தொடங்கியது. அப்போது மகப்பேறு மருத்துவமனையில் 76 படுக்கை வசதிகள் மட்டுமே இருந்தன.
அதையடுத்து எல்லப்பிள்ளைச் சாவடியில் 700 படுக்கை வசதியுடன் கூடிய ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கட்டப்பட்டது. மிகவும் கலைநயத்துடன் கட்டப்பட்ட இந்த அரசு மருத்துவமனையை காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி திறந்து வைத்தார்.
இம்மருத்துவமனை 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இயங்க தொடங்கியது. மகப்பேறு மருத்துவத்துக்கு என தனியாக கட்டப்பட்ட இம்மருத்துவமனையில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தமிழகப் பகுதியான விழுப்புரம், கடலூர், என அருகிலுள்ள மாவட்டத்தினரும் சிகிச்சைக்காக வருகின்றனர்.
கடந்த 2011-12 ல் பிரசவ எண்ணிக்கை 13,993 ஆக இருந்தது. படிப்படியாக இந்த எண்ணிக்கை குறைய தொடங்கி 2015-16 ல் 8,609 ஆனது. அதே நேரத்தில் நிதி ஒதுக்கீடு கடந்த 2011-ல் ரூ.25.7 கோடியாக இருந்தது. கடந்த 2016-ல் ரூ.43.5 கோடி நிதி இந்த மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மருத்துவமனையில் ரத்த வங்கி இல்லாத நிலையே தொடர்ந்து நீடிக்கிறது.
இதுதொடர்பாக உயிர்த்துளி ரத்ததான தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பிரபு 'தி இந்து'விடம் கூறியதாவது: புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும்போது, அவர்களுக்கு ரத்தம் தேவைப்படும் சூழல் ஏற்படும். அப்போது ரத்ததானத்தை மகப்பேறு மருத்துவமனையில் அளிக்க வசதியில்லை. அவர்கள் அரசு பொது மருத்துவமனையில் தான் சென்று வழங்க வேண்டும். அதுவும் காலையிலிருந்து மதியம் 2 மணிக்குள் தரவேண்டிய சூழலே நிலவுகிறது.
அங்கு கர்ப்பிணி பெயரை குறிப்பிட்டு ரத்ததானம் செய்த பின்னர் ஒப்புகை சீட்டு தருவார்கள். அதை பெற்றுக்கொண்டு அரசு மகப்பேறு மருத்துவமனையில் தந்தால்தான் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இங்கு அனுமதிக்கப்படும் பெரும்பாலா னோர் ஏழைகள்தான். மகப்பேறு மருத்துவமனையில் ரத்த வங்கியை தொடங்குவது அவசியம் என்றார். பிரசவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்களிலும், கர்ப்பிணிகள் தரப்பிலும் விசாரித்தபோது, “பிரசவத்துக்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தாலும் வெளிநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசும் நிதியை உயர்த்தி தருகிறது.
தமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால்தான் கர்ப்பிணிக்கு உதவித்தொகை தரப்படுகிறது. அதனால் புதுச்சேரிக்கு வரும் தமிழக கர்ப்பிணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது போதிய அளவு இடவசதி இருப்பதால் தேவையான வசதிகளை சுகாதாரத்துறை செய்து தருவது அவசியம்” என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT