Published : 31 Jul 2017 01:07 PM
Last Updated : 31 Jul 2017 01:07 PM

நீலகிரி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி இருட்டடிப்பு? - செட்-அப் பாக்ஸ் வாங்க நிர்பந்திப்பதாக புகார்

நீலகிரி மாவட்டத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், செட்-அப் பாக்ஸ் வாங்க கட்டாயப்படுத்துவதாவும், இதற்காக அரசு கேபிள் டிவி இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் 2011-ம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்றதும் கேபிள் டிவியை அரசே ஏற்று நடத்தி வருகிறது. அரசு கேபிள் டிவி என்ற துறை ஏற்படுத்தப்பட்டு, கேபிள் டிவி ஆபரேட்டர்களை ஒருங்கிணைத்து நுகர்வோருக்கு மாதம் ரூ.70 கட்டணத்துக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் தொகையை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வசூலிக்கின்றனர். நுகர்வோருக்கு கேபிள் டிவி கட்டணத்துக்கான ரசீது வழங்குவதில்லை. மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கிராமப்புற பகுதிகளில் ரூ.100 மற்றும் நகர்ப் புறங்களில் ரூ.130 வரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வசூலிக்கின்றனர் என்ற புகார்கள் உள்ளன.

செட்-அப் பாக்ஸுக்கு வசூல்

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் ஒளிபரப்பப்படும் சேனல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் நடவடிக்கை வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது செட்-அப் பாக்ஸ் அமைப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது எனக் கூறும் கேபிள் ஆபரேட்டர்கள், அவற்றை பொருத்த வாடிக்கையாளர்களிடம் ரூ.1700 வசூலிக்கின்றனர்.

தலைதூக்கும் தனியார் கேபிள்

நீலகிரி மாவட்ட பாஜக அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் ஆர்.மயில்சாமி கூறும்போது, ‘ மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆபரேட்டர்களிடம் கேட்டால், ‘இனி அரசு கேபிள் கிடையாது, செட்-அப் பாக்ஸ் பொருத்தினால் தான் தெளிவாகத் தெரியும், செட்-அப் பாக்ஸின் விலை ரூ.1600 முதல் ரூ.2000 வரை உள்ளது’ என்கின்றனர்.

மாத தவணையில் ரூ.150-ரூ.200 செலுத்தலாம் எனக் கூறி விற்பனை செய்கின்றனர். கேபிள் டிவி ஆபரேட்டர்கள், செட்-அப் பாக்ஸ் இணைப்பு வழங்க அனுமதியுள்ளதா? என தெரியவில்லை என்றார்.

வாடிக்கையாளர்களுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செட்-அப் பாக்ஸ் வழங்குவதால், அரசு நிறுவனம் புறக்கணிக்கப்பட்டு, மீண்டும் தனியார் கேபிள் தொழில் தலைதூக்கும் நிலை உருவாகியுள்ளது.

அதிகாரி எச்சரிக்கை

அரசு கேபிள் டிவி நிறுவன வட்டாட்சியர் பி.கோபாலகிருஷ்ணன் ‘தி இந்து’-விடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் கேபிள் கட்டணம் வசூலிக்கப்படுவ தாகவும், பல இடங்களில் ஒளிபரப்பப்படும் சேனல்கள் எண்ணிக்கை குறைக்கப் பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் செட்-அப் பாக்ஸ் விநியோகிப்பது குறித்து அரசு இதுவரை எவ்வித அறிவிப்பும் வழங்கவில்லை.

செட்-அப் பாக்ஸ் விற்பனை செய்ய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கேபிள் டிவி ஆபரேட்டர்கள், வாடிக்கை யாளர்களிடம் கட்டாயப்படுத்தி செட்-அப் பாக்ஸ் விற்பது குற்றமாகும்.

இது அரசு நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கை. இது குறித்து கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்படும். கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூட்டம் நடத்தி, உரிய கட்டணம் மற்றும் சேவை அளிக்க அறிவுறுத்தப்படும். மீறினால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x