Published : 22 Jul 2017 11:01 AM
Last Updated : 22 Jul 2017 11:01 AM
“நம்ம தூத்துக்குடியில இருக்கிற பெரும்பாலான பெட்ரோல் பங்குகள்ல மாற்றுத்திறனாளிகள்தான் வாகனங்களுக்கு காத்துப் பிடிக்கிறாங்க தெரியுமா?” போகிற போக்கில் நண்பர் சொன்ன தகவல் இது. களத்துக்குப் போய் விசாரித்தால் அவர் சொன்னது அப்படியே உண்மை!
பேருந்து, ரயில், கப்பல், விமானம் என நான்கு வகை போக்குவரத்து வசதிகளையும் ஒருங்கே கொண்ட தென் மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரம் தூத்துக்குடி. இங்கு மாநகர பகுதியில் மட்டுமே சுமார் 24 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இதில் இருபதுக்கும் மேற்பட்ட பங்குகளில் மாற்றுத்திறனாளிகளே வாகனச் சக்கரங்களுக்கு காற்றடைக்கும் பணியில் உள்ளனர்.
போற்றுதலுக்குரிய சேவை
தூத்துக்குடி மாவட்ட அளவிலும் பல பங்குகளில் மாற்றுத்திறனாளிகளே இந்தப் பணியில் அமர்த்தப் பட்டிருக்கிறார்கள். பெட்ரோல் பங்க் உரிமையாளர் களின் போற்றுதலுக்குரிய இந்த சேவையால் தூத்துக்குடி மாவட்டத்தில், தவழும் நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
தூத்துக்குடி - பாளையாங்கோட்டை சாலையில் ‘ஸ்ரீனிவாசா ஃப்யூல் சர்வீஸ்’ கம்பெனிக்கு அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் பங்க் உள்ளது. இரண்டிலும் தலா இருவர் வீதம் நான்கு மாற்றுத் திறனாளிகள், வாகனங்களுக்குக் காற்று அடைத்துக் கொண்டிருந்தனர். இதன் உரிமையாளர்களில் ஒருவரான கண்ணன், “தூத்துக்குடியின் கடலோர கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஓரளவுக்கு சகஜமாக செயல்பட முடிந்தவர்கள் கடல் தொழிலுக்கும் அது சார்ந்த உப தொழில்களுக்கும் போகிறார்கள். ஆனால், தவழும் நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அது சாத்தியமில்லாததாகி விடுகிறது. அவர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பைத் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதற்காகவே இங்குள்ள பெருவாரியான பெட்ரோல் பங்குகளில் மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு வைத்திருக்கிறோம்.
எங்க பங்கில் காற்று அடைக்கும் நெல்சன்கூட கடற்கரை கிராமம்தான். எங்ககிட்ட வேலைக்கு வந்து எட்டு வருசமாச்சு. இப்போ, தூத்துக்குடியிலேயே செட்டிலாகிட்டார். இவங்கள தவிர்த்து, பில்லிங் செக்சன்லயும் மூன்று மாற்றுத்திறனாளிங்க இருக் காங்க. எங்களோட இந்த ஒரு பங்கில் மட்டும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுத்துருக் கோம்.” என்றார்.
இவர்களுக்கு எளிதான வேலை
தொடர்ந்து பேசிய கண்ணனின் தந்தை பாலசுப்பிரமணியன், “தூத்துக்குடியில் நான்தான் முதன் முதலா ஏர் பிடிக்கதில் மாற்றுத்திறனா ளிகளை பணி அமர்த்துனேன். இது அவுங்களுக்கு எளிமையான வேலை. காற்றடைக்கும் பலரும் உட்கார்ந்த மேனிக்கு வேலை செய்பவர்கள்தான். அதனால் மாற்றுத்திறனாளிகளுக்கு இது சற்று எளிமையான வேலை. சராசரி ஆட்கள்கூட ஒவ்வொரு முறை வாகனம் வரும்போதும் குனிய, நிமிரச் சிரமப்படுவார்கள். ஆனால், உட்கார்ந்த நிலையில் வேலை செய்யும் இந்த மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தகைய சிரமங்கள் இல்லை.
முதல்கட்டமாக எனது ரெண்டு பங்குகளிலும் மாற் றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுத்தேன். இந்த விஷயம் அடுத்தடுத்து மற்ற இடங்களுக்கும் பரவியது. மத்தவங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புத் தந்தாங்க. இவங்கட்ட பிடிச்ச விஷயம் என்னன்னா, சொல்லாம, கொள்ளாம லீவு போடுறது. வாடிக்கையாளர்களின் கோபத்துக்கு ஆளாகுற மாதிரி நடந்துக்குறது, இப்படியெல்லாம் இவங்க நடந்துக்கமாட்டாங்க. தீபாவளி நேரத்துல வந்து பாருங்க. இவுங்களுக்கு எவ்ளோ ரசிகர் பட்டாளம் இருக்குன்னு தெரியும். ஸ்வீட்ல இருந்து பண்டிகை காசு வரை தேடி வந்து கொடுப்பாங்க” என்கிறார்.
முதலாளி பேசுவதை கேட்டு புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு நெல்சனும், குமாரும் கண்ணும், கருத்துமாக வாகனங்களுக்கு காற்றுப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். தூத்துக்குடியை மற்ற ஊர் மக்களும் பின்பற்றினால், பல்லாயிரம் மாற் றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி பிறக்குமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT