Last Updated : 04 Jul, 2017 03:10 PM

 

Published : 04 Jul 2017 03:10 PM
Last Updated : 04 Jul 2017 03:10 PM

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் கடிதம் அளிப்பு: பதவியேற்பு விரைவில் முடிவு

நியமன எம்எல்ஏக்களுக்கான மத்திய அரசின் உத்தரவு நகலை பாஜகவினர் உட்பட 3 பேரும் ஆளுநரிடம் பெற்றனர். பின்னர் சபாநாயகரிடம் மூவரும் கடிதம் அளித்தனர். அரசாணை வந்த பிறகு பதவியேற்பு குறித்து முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில அரசு பொறுப்பேற்று ஓராண்டாகியும் நியமன எம்எல்ஏக்களை நியமிக்கவில்லை. மத்திய பாஜகவின் உத்தரவுப்படிதான் ஆளுநர் கிரண்பேடி தாமாகவே 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தார். அப்பட்டியலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பாரதிய ஜனதா பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி அதிபர் செல்வகணபதி ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அரசு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு 5ம் தேதி (நாளை) விசாரணைக்கு வருகிறது.

ஆளுநர் கிரண்பேடி பரிந்துரைத்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக்கி மத்திய அரசின் பரிந்துரை புதுச்சேரி்க்கு வந்தது.

இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்ட 3 எம்எல்ஏக்களும் இன்று சந்தித்தனர். மத்திய அரசு எம்எல்ஏக்களாக நியமித்து அனுப்பிய கடிதத்தை பெற்றனர். அதைத்தொடர்ந்து தலைமை செயலர் மனோஜ் பரிதாவை சந்தித்து, அவரிடமிருந்து மத்திய அரசு அனுப்பிய உத்தரவு நகலையும் பதவியேற்புக்கான கடிதத்தையும் பெற்றனர். அதைத்தொடர்ந்து அக்கடிதத்தை எடுத்து கொண்டு சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து வழங்கினர்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் கூறுகையில், " மூன்று நியமன எம்எல்ஏக்கள் நியமனம் பற்றி அரசிதழில் வெளியிடப்படும். அதையடுத்து சட்டப்பேரவை செயலருடன் ஆலோசனை நடக்கும். பின்னர், நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்" என்று குறிப்பிட்டார்

நியமன எம்எல்ஏக்கள் மூவரும் கூறுகையில், "மத்திய அரசினுடைய 3 நியமன எம்எல்ஏக்களாக நியமித்துள்ளது தொடர்பான உத்தரவை பெற்றோம். மோடியின் அனைத்து திட்டங்களையும் முழுமையாக செயல்படுத்த பாடுபடுவோம். ஸ்மார்ட்சிட்டி, தூய்மை இந்தியா உட்பட அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம். பதவியேற்பை அரசு முடிவு செய்யும்" என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில் நியமன எம்எல்ஏக்கள் பதவியில் அரசியல் சார்ந்தோரை நியமிக்கக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் ஜெகனாதன் கூறுகையில், "புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் பாஜகவுடன் முதல்வர் நாராயணசாமி கூட்டு வைத்துள்ளார். ஜிஎஸ்டியை காங்கிரஸார் எதிர்த்துள்ள நிலையில் நாராயணசாமி வரவேற்றுள்ளதே இதற்கு சான்று" என்று குறிப்பிட்டார்.

நகரெங்கும் சுவரொட்டி..

நகர் முழுவதும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் ஜனநாயகத்திற்கு எதிராகவும் பாஜக - ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக சுவரொட்டியில் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x