Published : 16 Jul 2017 08:48 AM
Last Updated : 16 Jul 2017 08:48 AM
தமிழகத்தில் தற்போது தினமும் சுமார் 9 கோடி யூனிட் மின்சாரம், காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை, வெளி மாநிலங்களுக்கு விற்றுப் பயனடையலாம் என்கின்றனர் காற்றாலை உரிமையாளர்கள்.
நாட்டில் உள்ள சுமார் 25 ஆயிரம் காற்றாலைகளில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை தமிழகத்தில் உள்ளன. இவை 7,850 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. எனினும், அனைத்து பகுதிகளிலும் காற்றின் வேகம் சீராக இருக்காது என்பதால், அந்த அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவு காற்றாலைகள் உள்ளன. மே மாதம் முதல் செப்டம்பர் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும். அந்த நேரங்களில் தமிழகத்தின் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கை காற்றாலைகள் பூர்த்தி செய்கின்றன.
இதுகுறித்து இந்திய காற்றாலை கள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் ‘தி இந்து’விடம் கூறிய தாவது: தமிழகத்தில் தினமும் சுமார் 30 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதில், காற்றாலைகளின் பங்கு சுமார் 9 கோடி யூனிட். இன்னும் 15 சதவீதம் மின்சாரத்தை காற்றாலைகள் மூலம் பெற முடியும். அந்த அளவுக்கு காற்றாலைகள் உள்ளதுடன், காற்றும் சாதகமாக உள்ளது. எனினும், குறிப்பிட்ட அளவு மட்டுமே காற்றாலை மின்சாரத்தை தமிழக மின்வாரியம் எடுக்கிறது. நமது தேவை பூர்த்தியடைவதால், காற்றாலைகளை முழு அளவில் பயன்படுத்திக் கொள்வதில்லை.
தற்போது, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, காற்றாலை மின்சாரத்தை அந்த மாநிலங்களுக்கு விற்பனை செய்யலாம். இது தொடர்பாக மத்திய அரசின் மின் வணிகக் கழக அதிகாரிகளிடம் (பவர் டிரேடிங் கார்ப்பரேஷன்) நேரில் வலியுறுத்தினோம். இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் தெரிவிக்குமாறும், அவர்கள் மின்சாரத்தை வழங்கினால், அதைப் பெற்று, மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய உதவுவதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு காற்றாலை மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு வழங்கும்போது, தமிழகத்தில் இன்னும் கூடுதலாக காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். சுமார் 7 கோடி முதல் 9 கோடி யூனிட் வரை உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரத்தின் அளவை 10 முதல் 11 கோடி யூனிட்டாக அதிகரிக்கலாம் என்றார்.
நிலுவைத் தொகை
காற்றாலைகள் வழங்கும் மின்சாரத்துக்கு உரிய தொகை, காற்றாலை உரிமையாளர்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படவில்லை. நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக மின் வாரியம் முன்வர வேண்டும். வெளி மாநிலங்களுக்கு காற்றாலை மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம், காற்றாலை உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை, உடனுக்குடன் வழங்க முடியும் என்கின்றனர் காற்றாலை உரிமையாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT