Published : 04 Jul 2017 10:11 AM
Last Updated : 04 Jul 2017 10:11 AM

‘‘சைக்கிள் என்று சொல்லித் தராதீர்கள்..!’’- வினோத்குமாரின் விடியல் பிரச்சாரம்

புறநகர் ரயில் பயணங்கள் சுவாரஸ்ய மானவை. பலவிதமான குழுக்களை பார்க் கலாம். கஞ்சிரா இசைத்துப் பாடுவார்கள். கானா குழுக்களும் உண்டு. புரட்சிக் குழுக்களும் அனலைக் கக்கும். ரயிலே தடம் புரண்டாலும் கவலைப்படாமல் மும்முரமாக ரம்மி ஆடுவார்கள். விதவிதமான விற்பனையாளர்கள் வருவார்கள்; ராகம் போட்டு விற்பார்கள். இத்தனை விதமான மனிதர்களுக்கு மத்தியில் தனி ஒருவனாக தாய்மொழி வழி கல்விக்காக குரல் கொடுத்து கவனம் ஈர்க்கிறார் வினோத்குமார்.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலம்

வேகமான நடையுடன் ரயிலில் ஏறும் வினோத் குமார் கம்பீரக் குரலில் தொடங்குகிறார். ‘உங்க ளுக்கு நிறைய வேலை இருக்கும். ஆனால், நான் சொல்ல வருவது உங்கள் குழந்தைகளின் எதிர் காலம். தயவு செய்து கவனியுங்கள்..’ என்பவர், இன் றைய தனியார் பள்ளிகளின் தரத்தையும் முறையற்ற கற்பித்தலையும் கிழித்துத் தொங்க விடுகிறார்.

வெறுமனே இவர் சாடுவதில்லை, எடுத்து வைக்கும் ஒவ்வொரு விஷயத்துக்கும் சரியான தரவுகளை வைக்கிறார். உலகளாவிய உதாரணங் கள் அளிக்கிறார். வளர்ந்த நாடுகளின் தாய்மொழி கற்பித்தல் முறைகளை விளக்குகிறார். நம் நாட்டின் தாராசந்த் கல்வி குழு தொடங்கி யஷ்பால் கல்வி குழு வரை அளித்த பரிந்துரைகளை முன்வைக் கிறார். இறுதியாக ‘தாய்மொழி வழி கல்வியே சிறந்தது; ஆங்கிலம் தேவை எனில் தனி மொழிப் பாடமாக கற்றுக் கொள்ளலாம்’ என்கிறார்.

ஆவணப்படம்

தனது இந்த பிரச்சாரத்தை முன்வைத்து, ‘கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை’ என்ற ஆவணப் படத்தையும் இயக்கி இருக்கிறார் வினோத் குமார். பிரச்சாரத்தின் ஊடே அதன் குறுந்தகட்டை யும் விற்கிறார். கடந்த 2012-13-ல் தமிழக அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட ஆங்கில வழி கல்வி கற்பித்தல் முறையை கேள்விக்குள்ளாக்குவதில் தொடங்குகிறது இவரது ஆவணப் படம். பலதரப்பட்ட மக்கள் அரசின் ஆங்கில வழிக் கல்வியை வரவேற்கிறார்கள். ஆனால், கல்வியாளர்களான ச.சீ.ராஜகோபாலன், பிரபா கல்விமணி, சமச்சீர் கல்விக்குழுத் தலைவர் சா.முத்துகுமரன் உள்ளிட்டோர் அதை எதிர்க்கிறார்கள்.

இவற்றை எல்லாம் ஆவணப்படத்தில் தொகுத்திருக்கும் வினோத்குமார் தனது தரப்பில் பல்வேறு கேள்வி களையும் எழுப்புகிறார். ‘ஒரு குழந்தை தனது தாய்மொழியை எங்கே கற்றுக் கொள்ளத் தொடங்குகிறது? வகுப்பறையிலா? தாயின் வயிற்றிலா? பிறந்தவுடன் அந்த குழந்தைக்குத் தினமும் இத்தனை முறை மனப்பாடம் செய், இத்தனை முறை எழுது, முட்டிப்போடு என்றெல் லாமா மொழியை கற்க பயிற்சி கொடுத்தோம்?

ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியின் அஸ்தி வாரத்தை பலமாக அமைத்துவிட்டு ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் மட்டுமல்ல, ஆறு மாதத்துக்கு ஒரு மொழி என்று பல மொழிகளை கற்றுக்கொடுங்கள். ஆனால், அறிவியல், கணிதம், வரலாறு, மருத்துவம், பொறியியல் உள்ளிட்டவை தாய்மொழியில் மட்டுமே இருக்கட்டும்’ என்கிறார்.

‘சைக்கிள்’ வேண்டாமே

வினோத்குமார் சொல்லும் இந்த ஒரு விஷயத்தை கவனித்தால் அவர் சொல்வது எவ்வளவு நியாய மானது என்பது புரியும். ‘‘கல்வி என்பது சிந்தனையை தூண்ட வேண்டும். ‘சைக்கிள்’ என்று சொல்லித் தந்தால் அது குழந்தையின் சிந்தனையை தூண்டாது. மிதிவண்டி என்று சொல்லிக் கொடுங்கள். அப்போது மிதிக்காத வண்டி இருக்கிறதா? என்று குழந்தையின் சிந்தனை தூண்டப்படும். ஏரோபிளேன் என்றால் சிந்தனை தூண்டாது. வானூர்தி என்று சொல்லிக் கொடுங்கள். அப்படி எனில் தரையூர்தி இருக்கிறதா என்று குழந்தை கேள்வி கேட்கும்’’ என்கிறார் வினோத்குமார். நியாயம் தானே!

இப்போதெல்லாம் ஒரு தரமான புத்தகத்தை பிரபலமான பதிப்பகம் வெளியிட்டு மூவாயிரம் பிரதிகள் விற்பதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறது. ஆனால், தனது பரப்புரையில் மட்டும் கடந்த ஒரு ஆண்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந் தகடுகளை விற்றிருக்கிறார் வினோத்குமார். அவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன அவரது ஆவணப்படத்தில்!