Published : 25 Jul 2017 10:35 AM
Last Updated : 25 Jul 2017 10:35 AM
‘வீட்டைக் கட்டிப்பார்; கல்யாணம் பண்ணிப்பார்’ என்பார்கள் முன்னோர்கள். உண்மைதான், நிதி சம்பந்தப்பட்டது என்பதால் முன்பெல்லாம் இந்த இரண்டு சுப காரியங்களையும் முடிப்பது அவ்வளவு சுலபமில்லை. இன்று, நிதி ஒரு பிரச்சினை இல்லை. ஆனாலும் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் நிச்சயமாய் நடக்குமா என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை.
முன்பு, அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்காவது ஒரு சிலர்தான் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்துக்குப் போவார்கள். அதுவே பெரிய விவாதமாகப் பேசப்படும். வரதட்சணை, ஒருவருக்கொருவர் பிடிக்காமல் திருமணம் செய்வது, குழந்தையின்மை இதுபோன்ற சில காரணங்கள் மட்டுமே இந்த மணமுறிவுகளுக்குக் காரணமாக இருந்தன.
தொட்டதுக்கெல்லாம் விவாகரத்து
இன்று நிலைமை அப்படி இல்லை. தொட்டதுக்கெல்லாம் விவகாரத்துக் கோரப்படுகின்றன. இதுஒருபுறமிருக, நடந்த திருமணங்களின் முறிவைவிட நிச்சயித்த திருமணங்களே நடக்காமல் நின்றுபோகும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. பல திருமணங்கள் நிச்சயதார்த்தத்தோடு முடிந்து விடுகின்றன. காதலர்கள்கூட கடைசிவரை சேர்ந்து வாழமுடியாமல் தற்கொலைக்குத் துணி கிறார்கள்; அல்லது காதலை முறித்துக் கொள்கிறார்கள். சிலசமயம், காதல் திருமணங்களேகூட நீதிமன்றத் தீர்வுக்கு வருகின்றன.
இப்படியான நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன என்ற கேள்விக்கு பதில் சொன்னார் மதுரையைச் சேர்ந்த மன நல ஆலோசகர் மற்றும் உளவியல் சிகிச்சையாளர் ப.ராஜ சவுந்தரபாண்டியன். “இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் சராசரியாக நூற்றுக்கு ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகிறது. இதுவேறு கதை. ஆனால், சமீபகாலமாக நிச்சயதார்த்தத்தோடு திருமணங்கள் நின்றுபோவது அதிகரித்து வருகிறது.
விவாதத்தில் வந்த வில்லங்கம்
எனக்குத் தெரிந்த ஒரு ஜோடியின் கதையைச் சொன்னால் இதிலுள்ள உளவியல் பிரச்சினை உங்களுக்குப் புரியும். பிரியா, ஆனந்த் (பெயர் மாற்றப்படுள்ளது). மதுரையைச் சேர்ந்த இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. வழக்கம்போல் இவர்களும் நிச்சயத்துக்குப் பிறகு நேரம் காலம் பார்க்காமல் அலைபேசியில் காதல் பேசினார்கள். சீக்கிரமே ஆனந்தை பிரியாவை ஒரு வாட்ஸ் ஆப் குரூப்பில் சேர்த்தார்; வந்தது வில்லங்கம். இருவரும் அந்த குரூப்பில் பதிவிடப்படும் விஷயங்களை எழுத்துக்களால் விவாதித்தார்கள். அதில் சில விஷயங்களில் பிரியாவின் நிலைப்பாட்டை ஆனந்தால் ஏற்க முடியவில்லை. போகப் போக இந்த கருத்துப் பரிமாற்றங்கள் இருவருக்குள்ளும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தின. எழுத்துக்கள் வார்த்தைப் போராக வெடித்தன. இருவருமே ஒருவரைப் பற்றிய மற்றவரின் எண்ணங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
விளைவு, ‘இந்தப் பெண் நம்ம குடும்பத்துக்கு சரிவரமாட்டாள்’ என்று வீட்டில் குண்டைத் தூக்கிப் போட்டார் ஆனந்த். இதனால், திருமணம் நின்றுபோனது. இருவரின் பெற்றோரும் ரொம்பவே குழம்பிப் போனார்கள். ஆனாலும் எந்த முடிவையும் அவர்கள் தங்கள் பிள்ளைகள் மீது திணிக்க விரும்பவில்லை. பிரியா சற்று மனச்சோர்வுக்கு உள்ளாகி, மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுக்கத் தொடங்கினார். இரண்டே மாதத்தில் ஆனந்துக்கு இன்னொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால், அதுவும் திருமணத்தில் முடியவில்லை.” என்று சஸ்பென்ஸ் வைத்தவர் தொடர்ந்து பேசினார்.
இன்னொரு திருமணமும் நின்றது
“இரண்டாவதாக ஆனந்துக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கெனவே இன்னொரு இடத்தில் திருமணம் நிச்சயமாகி ஏதோ ஒரு காரணத்துக்காக திருமணம் நின்றிருக்கிறது. இந்த விவரம் தெரிய வந்ததும் விரக்தியின் விளிம்புக்குப் போய் திருமணத்தை நிறுத்திவிட்ட ஆனந்த், மனநலம் பாதிக்கப்பட்டார். அவரும் மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தார்.
ஆனந்தும் பிரியாவும் ஒரே மனநல மருத்துவரிடம் தான் சிகிச்சை எடுத்தார்கள். இருவருக்கும் அந்த விஷயம் தெரியவில்லை. இவர்களைப் பற்றிய விவரம் மனநல மருத்துவருக்கு தெரியவர, அவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் உளவியல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். சிகிச்சையின் தொடக்கத்தில் இருவரும் சொன்ன ஒரே பதில் ‘எங்கள் இருவரின் கருத்தும் சில காரணங்களின் அடிப்படையில் வேறுபடுகிறது. எனவே, எங்களால் ஒன்றாக வாழமுடியாது.’ என்பதுதான்.
உளவியல் சிகிச்சையால் நாளடைவில் அவர்களுக்குள் இருந்த மனஇறுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் பேசினார்கள். மெல்ல மெல்ல, தங்களின் தவறுகளை உணர ஆரம்பித்தார்கள். சிகிச்சையின் முடிவில், இருவருக்கும் மீண்டும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் நல்லவிதமாக நடந்தேறியது.
பரஸ்பர புரிதல் இல்லை
இன்று, பெரும்பாலான திருமணங்கள் நிச்சயிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் வெகு நாட்களுக்குப் பிறகே திருமணம் நடைபெறுகிறது. இடைப்பட்ட காலத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் அலைபேசியில் அடிக்கடி பேசிக்கொள்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக இப்படிப் பேசிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அப்படியான பரஸ்பர புரிதல் இல்லாமல் பேச்சுவார்த்தைகள் வேறு திசையில் பயணிப்பதால்தான் மனச் சங்கடங்கள் ஏற்பட்டு திருமணங்கள் நின்றுபோகின்றன.
இதனால், பெற்றோருக்கு எவ்வளவு மனச் சங்கடங்களும் அவமானங்களும் ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம் இந்தக் காலத்துப் பிள்ளைகள் கவலைப்படுவதில்லை. பரஸ்பர புரிதல்கள் இருந்ததால் தான் நம் முன்னோர்கள் மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கப் பழகினார்கள். அத்தகைய புரிதல்கள் இன்றைய தலைமுறைக்கும் வராவிட்டால் மண முறிவுகள் தவிர்க்க முடியாத நோயாகிவிடும்” என்றார் ராஜ சவுந்தரபாண்டியன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT