Published : 07 Jul 2017 09:16 AM
Last Updated : 07 Jul 2017 09:16 AM
எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் மீனவர்களைக் கட்டுப் படுத்தும் வகையில் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த மசோதா நிறை வேறினால் தமிழக மீனவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இலங்கை மீன்வளத் துறையின் அனுமதி பெறாமல் ஆழ்கடலில் மீன்பிடித் தொழில் செய்யும் இலங்கை மீனவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை (இலங்கை ரூபாயில்) அபராதம் விதிப்பதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதேபோல் இலங்கை கடற்பகுதியில் எல்லை மீறி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் படகின் தன்மையைப் பொறுத்து ரூ. 10 லட்சம் முதல் ரு. 10 கோடி வரையிலும் (இலங்கை ரூபாய் மதிப்பில்) அபராதம் விதிப்பதற்கு அந்நாட்டு மீன்வளத் துறையின் சார்பில் யோசனை வழங்கப்பட்டு இதற்காக புதிய சட்டத்திட்டத்தை தயாரிப்பதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டது.
ரூ.90 கோடி இழப்பு
இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசும்போது, “இலங்கை கடற்பரப்பில் தமிழக மீன வர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததால் கடந்த ஆண்டு மட்டும் ரூ. 90 கோடி (இலங்கை மதிப்பில்) இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வாரத்துக்கு 6 ஆயிரம் டன் அளவிலான மீன்களை பிடித்துச் செல்கின்றனர். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்தி வருவதால் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 50 சதவீதம் அத்துமீறல்கள் குறைந்துள்ளன.
எனினும் இதனை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் அபராதம் விதிக்கக்கூடிய புதிய மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித் திருந்தார்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்தால் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா சிறு திருத்தம் செய்து நேற்று (வியாழக்கிழமை) இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரிதல் இல்லை
இது குறித்து ராமேசுவரம் மீனவப் பிரதிநிதி யு. அருளானந்தம் கூறியதாவது: தமிழக மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதியில்தான் மீன் பிடிக்கின்றனர். ஆனால், இலங்கை மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைகளில் ஏழு இடங் களில் மீன் பிடிக்கிறார்கள். இதனை தமிழக மீனவர்கள் சிங்கள மீனவர்களுக்கு எதிரான பிரச்சினையாக மாற்றுவது இல்லை. இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தைகளின்போதுகூட இலங்கை தமிழ் மீனவர்கள் தமிழக மீனவர்களை இழுவலைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்றுதான் கோரிக்கை விடுத்தார்கள். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டு வதை அவர்களும் பிரச்சினை யாக்குவதில்லை. ஏனென்றால் கடலும் நிலப்பரப்பும் ஒன்று கிடை யாது. இந்த புரிதல் இந்திய-இலங்கை இரு நாட்டு மீனவர் களிடம் உள்ளது. ஆனால் இத்த கைய புரிதல்கள் இந்திய - இலங்கை அரசு அதிகாரிகளிடமோ, அமைச்சர் களிடமோ கிடையாது.
தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அரசு மசோதா நிறை வேற்றுவதும், அதற்கு பதிலாக இந்தியப் பகுதியில் மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுவதும் கண்டனத்துக்குரியது.
இரு நாட்டு மீனவர்களுக்கும் கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டால் இரு நாட்டு இறையாண்மைக்கும் விபரீத விளைவுகள் ஏற்படும் என்றார்.
இலங்கையின் இந்த சட்ட மசோதா தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT