Published : 11 Jul 2017 01:26 PM
Last Updated : 11 Jul 2017 01:26 PM

பெரியாறு குடிநீர் திட்டம் அறிவிப்புக்கு யார் காரணம்? - அமைச்சர், முன்னாள் மேயர் ஆதரவாளர்கள் ‘முட்டல்’

பெரியாறு அணையில் இருந்து குழாய் மூலம் மதுரை மாநகராட்சிக்கு நேரடியாக குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்ததற்கு பெரும் முயற்சி எடுத்ததாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை வாழ்த்தி மதுரை நகர் முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். ஆனால், இந்த திட்டம் புதிய திட்டம் இல்லை என்றும், ஏற்கெனவே அரசு ஒப்புதலுக்கு அனுப்பிய பழைய மாநகராட்சி குடிநீர் திட்டம்தான் என முன்னாள் மேயரும், புறநகர் மாவட்டச் செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள் கூறி வருவதால் மதுரை மாவட்ட முதல்வர் எடப்பாடி அணியில் அமைச்சர், முன்னாள் மேயர் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தமிழக அரசு சார்பில் கடந்த 30ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மதுரையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் பெரியாறு அணையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு குழாய்கள் மூலம் நேரடியாக தினமும் 125 எம்எல்டி குடிநீர் கிடைப்பதற்கான திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.

இந்த திட்டத்தை புதிய திட்டம் போல் முதல்வர் அறிவித்தாலும், ஏற்கெனவே இந்த திட்டம் மதுரை மாநகராட்சி தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பிய பழைய திட்டம்தான். ஆனால் அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் கிடந்தநிலையில் தற்போது முதல்வரே அறிவித்துள்ளதால் இந்த திட்டம் கண்டிப்பாக நிறைவேற வாய்ப்பிருப்பதால் மதுரை மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ முயற்சியாலே பெரியாறு குடிநீர் திட்டத்தை முதல்வர் அறிவித்ததாக அமைச்சருக்கு நன்றி தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் மாநகர் முழுவதும் பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அமைச்சர் ஆதரவாளர்களின் இந்த செயல், இந்த திட்டத்தை ஏற்கெனவே தயார் செய்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பார்வைக்கு அனுப்பிய முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள் கூறியதாவது:

ராஜன் செல்லப்பா மேயராக இருந்தபோது 900 கோடி ரூபாயில் தொலைநோக்கு பார்வையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே சர்வே செய்து பெரியாறு அணையில் இருந்து நேரடியாக மதுரைக்கு குடிநீர் கொண்டு வர பெரியாறு கூட்டுகுடிநீர் திட்டம் தயாரித்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும் இந்த திட்டத்தை நிறைவேற்ற ஆர்வமாக இருந்தார்.

ஆனால், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 108 அடிக்கு கீழ் சென்றால் குடிநீருக்கு கூட தண்ணீரை எடுக்க கேரளா எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால், இந்த திட்டத்தை நிறைவேற்ற அப்போதைய தலைமை பொறியாளர் தயக்கம் காட்டியதாக கூறப்பட்டது. அதனால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது மதுரை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு முதல்வர் வந்தபோது அந்த திட்டத்தை நிறைவேற்றினால் மட்டுமே மதுரையின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அவரிடமும் அமைச்சர்கள் மட்டுமில்லாது எல்லோருமே அழுத்தம் கொடுத்தனர்.

எல்லோருடைய கூட்டு முயற்சியாலே தற்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதித்த, அவர் நிறைவேற்ற நினைத்த இந்த குடிநீர் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அப்போது முதல்வரே, ‘‘மதுரையின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் வற்புறுத்தினர். மற்ற கோரிக்கைகளை தள்ளிப்போடலாம், ஆனால் குடிநீர் பிரச்சினையாச்சே, தள்ளிப்போட மனமில்லை. அதனால், மதுரையின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பெரியாறு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும், ’’ என வெளிப்படையாக அந்த திட்டம் அறிவிப்பிற்கான காரணத்தை தெரிவித்தார்.

ஆனால், ஏதோ அமைச்சர் செல்லூர் கே.ராஜூ-தான் முயற்சி எடுத்ததாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டுவது சரியில்லை. அதை அவரும் கண்டிக்காதது வருத்தம் அளிக்கிறது என்றனர்.

இதுகுறித்து செல்லூர் கே.ராஜூ ஆதரவாளர்களிடம் கேட்டபோது, முதல்வர் மதுரை வந்தபோது அவரிடம் எல்லோரும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கலாம். மூத்த அமைச்சர் என்ற முறையில் செல்லூர் கே.ராஜூ கொடுத்த அழுத்தமே இந்த திட்டத்தை முதல்வர் அறிவிக்க காரணமாயிருந்தது. மற்றொன்று போஸ்டர் அடிக்கும்போது நன்றி தெரி வித்து முதலமைச்சர், அமைச்சர்கள் பெயரைத்தான் போட முடியும். மற்றவர்கள் தங்கள் பெயரை எப்படி, ஏன் முன்னிலைப் படுத்தவில்லை என வருத்தப்படுவதற்கு நியாயமில்லை என்றனர்.

பெரியாறு குடிநீர் திட்டம் நிறைவேறுமா?

முதலமைச்சர் ஜெயலலிதா பரிசீலிக்க சொல்லியும், ஆர்வமாக இருந்ததாகவும் சொல்லப்பட்ட மாநகராட்சி அனுப்பிய பெரியாறு குடிநீர் திட்டத்தை, ஆரம்பத்தில் தமிழக அரசு நிறைவேற்றாததற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் அந்த திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு மதுரையின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அம்ரூத் திட்டத்தில் வைகை 3-வது குடிநீர் திட்டம் நிறைவேற்ற தமிழக அரசு நிதி ஒதுக்கி ஒப்புதல் வழங்கியது. தற்போது முதலமைச்சரே பெரியாறு குடிநீர் திட்டத்தை அறிவித்துள்ளதால் வைகை 3-வது குடிநீர் திட்டம் கைவிடப்பட வாய்ப்புள்ளது. பெரியாறு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. ஆனால், திட்டமிட்டப்படி இந்த திட்டத்தில் ஆண்டு முழுவதும் 125 எம்எல்டி குடிநீர் பெற முடியுமா என அதிகாரிகள் ஒருபுறம் கவலை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x