Published : 15 Nov 2014 09:25 AM
Last Updated : 15 Nov 2014 09:25 AM
திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்கும், குடிநீருக்கும் முக்கிய நீராதாரமாக விளங்கும் பாம்பாற்றை ஒட்டி கேரள அரசு தடுப்பணை கட்டத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் பாம்பாற்றுக்கு வரும் பல சிறிய ஓடைகளிலும் தனியார் தேயிலைத் தோட்ட அதிபர்கள் தடுப்பணைகள் கட்டியுள்ளனர். இதனால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீராதாரம் தடுக்கப்படுகிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமராவதி அணை நீர் மூலம் திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
பாம்பாற்றில் அணை கட்டுவோம் என கேரள அரசு 2010-ம் ஆண்டு முதலே பிடிவாதம் செய்து வருகிறது. அதன்படி, கடந்த 3-ம் தேதி பட்டிச்சேரியில் ரூ.26 கோடியில் அணை கட்டும் திட்டத்துக்கு கேரள அரசு அடிக்கல் நாட்டியுள்ளது. பாம்பாற்றுக்கு வரும் தண்ணீர் தடுக்கப்பட்டு, 75 அடி உயர அணையில் நிரப்பப்படும். அது நிரம்பி வழிந்தால் மட்டுமே பாம்பாற்றுக்கு தண்ணீர் கிடைக்கும்.
கேரள மாநிலம், மூணாறு பகுதி களில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களின் வழியாக பாம்பாற் றுக்கு வரும் ஓடைகளில், தோட்ட அதிபர்கள் தடுப்பணைகள் கட்டி யுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறு கின்றனர். கேரளாவுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால், அந்த மாநில அரசு கண்டுகொள்வ தில்லை. இதனால் ஏற்படும் பாதிப்பு தமிழகத்துக்கு மட்டுமே.
அமராவதி அருகே அதிகாரிகளின் ஆசியோடும், பன்னாட்டு நிதியுதவியுடனும் இயங்கும் தனியார் குடிநீர் நிறுவனம், தினமும் 5 லட்சம் லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி வருகிறது. இதைக் கண்டித்து, சில விவசாய அமைப்புகள் ஏற்கெனவே போராட்டம் நடத்தியுள்ளன.
தொடரும் தண்ணீர் திருட்டு
150 கி.மீ. தூரம் உள்ள அமராவதி ஆற்றின் இரு கரைகளிலும் ஆயிரக்கணக்கான இடங்களில், பல ஆண்டுகளாக மோட்டார்கள் மூலமாகத் தண்ணீர் திருட்டு அரங்கேறி வருகிறது. இது விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும். இருப்பினும், முற்றிலும் தண்ணீர் திருட்டு தடுக்கப்படவில்லை.
கட்சிகளின் நிலைப்பாடு
கேரள அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தியும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர் பாக அமைச்சரவை கூட்டமோ அல்லது சட்ட ரீதியாக தடுப்பது குறித்த விரைவான நடவடிக் கையோ இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் திமுகவின் செயல்பாடும் தங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விவசாயி கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தும், அதன் தமிழக தலைவர்கள் நதிநீர் பிரச்சினையில் கருத்து தெரிவிக்காமல் மவுனம் காப்பது எங்கள் மீது அவர்களுக்கு அக்கறையின்மையை காட்டுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மதிமுக
பாம்பாறு விவகாரத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடனே கண்டன அறிக்கை வெளியிட்டதோடு, இன்று (15-ம் தேதி) அமராவதி பாசன விவசாயிகளை நேரில் சந்தித்து பேசவும், பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தின் நீராதாரத்தை தடுக்க அண்டை மாநிலங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சினையில் தமிழக அரசு மவுனத்தைக் கலைத்து, துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT