Published : 24 Jul 2016 09:30 AM
Last Updated : 24 Jul 2016 09:30 AM
பொதுமக்களும், வியாபாரிகளும் பயன்பெறும் வகையில் அம்மா வாரச்சந்தைக்கென தனி இணையதளம் தொடங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் உள்ளிட்ட 7 இடங்களில் அம்மா வாரச் சந்தை விரைவில் திறக்கப்பட உள்ளன. இதில் 25 அரசுத் துறைகள் சார்பில் 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அந்தந்த துறைகள் சார்பில் என்னென்ன பொருட்கள் விற்பனை செய்ய உள்ளன என்பது குறித்து, சில தினங்களுக்கு முன்பு மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மா வாரச் சந்தைக்கென பதிய இணையதளம் ஒன்றைத் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
புதிய இணையதளம்
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: தற்போது உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம் அம்மா வாரச் சந்தை தொடர்பாக விழிப் புணர்வு ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் மத்தியிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
அதனால் எந்தெந்த பொருட் களை விற்கலாம்? அதற்கு எந்த துறையை, எங்கு அணுக வேண்டும்? அதற்கான தொடர்பு எண் என்ன? பொருட்களை விற்பனை செய்வதற்கான நடைமுறைகள் என்னென்ன என்பது குறித்து வியாபாரிகளுக்கு தெரிவிக்கும் விதமாகவும், எந்தந்த துறையில் எந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன? எந்த தேதியில் எந்த இடத்தில் வாரச்சந்தை நடைபெறுகிறது? என்பது குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் விதமாகவும், அம்மா வாரச்சந்தைக்கென தனி இணையதளம் தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். அதற் கான சாத்தியக்கூறுகள் குறித்து, மாநகராட்சி துறைகளில் ஒன்றான மின்னணு துறையுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.
தனி உதவி மையம்
மேலும், அந்தந்த துறைகளுக்கென தனி உதவி மையத்தை தொடங்கவும், தனி தொடர்பு எண் வழங்கவும், அந்தந்த துறைகளை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கிகள் ஆர்வம்
மேலும் அம்மா வாரச் சந்தையில் பங்கேற்க வங்கிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. வங்கிகளில் கடன் பெற்று, உற்பத்தி செய்து வரும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை தொழில் முனை வோருக்கு ஏற்படுத்தி தரும் வகையில், தங்களுக்கும் கடைகள் ஒதுக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கேட்டு வருகின்றனர். அது தொடர்பாகவும் மாநகராட்சி சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பன்னாட்டு நிறுவனங்களும்
இதற்கிடையில் தமிழகத்தில் கோலோச்சி வரும் பிரபல பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய நிறுவனங்களும் தங்கள் பொருட் களை 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் விற்க, மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி வருகின்றன. அது தொடர்பான பேச்சுவார்த்தையும் தற்போது நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT