Published : 21 Nov 2014 10:38 AM
Last Updated : 21 Nov 2014 10:38 AM
இன்று - நவ.21 - சர்வதேச மீனவர்கள் தினம்
மீனவர்கள் கடலில் தங்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில், 40 நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997-ல் டெல்லியில் கூடி விவாதித்து, உலக அளவில் இணைந்து மீனவர் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராடுவதற்காக ‘மீன் பிடித் தொழிலாளர்கள் பேரவை’ என்ற அமைப்பை உருவாக்கினர்.
இதன்மூலம் மீனவர்களுக்கு எதிராக அரசுகள் கொண்டுவரும் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள், பாரம்பரிய மீனவர்கள் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதிப்பால் கடல் மாசடைந்து மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப் பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடிவு எடுக்கப்பட்ட நாளான நவம்பர் 21-ம் தேதிதான் ‘சர்வதேச மீனவர்கள் தின’மாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச மீனவர்கள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில், தமிழக மீனவர்களிள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணுவது குறித்து கடலோடிகள் சமுதாயத்தைச் சேர்ந்தவரும், கடல் வளம் பேராசிரி யரும், எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்தந்தின் ‘தி இந்து’-விடம் கூறியது:
‘தமிழக மீனவர்கள் குற்றப் பின்னணி உடையவர்கள். அவர்கள் எல்லை மீறுகிறார்கள். அதனால் தண்டனைக்குரியவர்கள். ஆனால், நாங்களோ நீதியுடன் நடந்து கொள்கிறோம்’ என்ற தோற்றத்தை சர்வதேச சமூகத்தில் இலங்கை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதுபோலவே, தமிழின ஆர்வலர் களும், இந்திய தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் ராமேசுவரம் மீனவர்கள் குறித்து மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள், தமிழகக் கடலோரங்களில் அனல்மின் நிலையங்களும், தொழிற்சாலைகளும், வர்த்தகத் துறைமுகங்களும் திடீர் திடீரென முளைத்து, பாரம்பரிய மீனவர்களின் குடியிருப்புகளையும் வாழ்வாதாரத்தையும் விழுங்கிக் கொண்டிருப்பது குறித்து வாய் திறப்பதேயில்லை.
மன்னார்க்கடல் சூழலியலையும் அதன் வளங்களையும் பாதுகாத்து தமிழகம், இலங்கையின் ஏழை பாரம்பரிய மீனவர்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்கும் கடமை இந்திய- இலங்கை அரசுகளுக்கு உண்டு. 2014 ஆகஸ்ட்டில் வெளியான மீனா குமாரியின் அறிக்கையில், ‘இந்தியாவின் ஆழ்கடல் மீன் வளங்களை அறுவடை செய்ய வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களை அதிக எண்ணிக்கையில் அனுமதிக் கலாம்’ என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, மாறாக நமது தமிழக மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகள் வழங்கி, இந்தியாவின் ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிக்க பயிற்சியும், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வாங்குவதற்கு மானியமும் வழங்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி. பட்டினம் பகுதியில் சர்வதேச தரத்தில் மீன்பிடித் தளம் அமைத்து, ஆழ்கடல் மீன்பிடி படகுகள் நமது கடல் எல்லையிலும், இலங்கை கடல் எல்லையிலும் நுழையாமல் அந்தமான் வரையிலும் நீண் டிருக்கிற நமது ஆழ்கடல் மீன்பிடி பகுதிகளில் சென்று மீன் பிடிக்கலாம். இதன்மூலம், நமது கடல் மீன் வளங்களை நம் மீனவர்களே அறுவடை செய்வதுடன், தமிழக மீனவர்களின் துயரத்தை போக்குவதற்கு நீடித்ததீர்வாக அமையும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT