Published : 08 Feb 2014 11:00 AM
Last Updated : 08 Feb 2014 11:00 AM
அத்துமீறி ஊருக்குள் புகுந்து காய்கறி தோட்டங்களை நாசப்படுத்திவரும் யானைகள் கூட்டத்தை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டக்கோரி விவசாயிகள் தொடர்ந்து 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் அருகேயுள்ள உத்தனப்பள்ளி, போடூர்பள்ளம், பீர்ஜேப்பள்ளி, சினகிரிப்பள்ளி, அணியாளம், காமன்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாக 50-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம், விவசாயப் பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஓட்டர்பள்ளம், துப்பகானப்பள்ளி பகுதியில் நுழைந்த யானைகள் கூட்டம், அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த ராகி, பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட காய்கறி தோட்டங்களை நாசம் செய்தன. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக் கிழமை பீர்ஜேப்பள்ளி, துப்புகானப் பள்ளி, கெம்மேப்பள்ளி ஊராட்சி களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள், ஓசூர் - ராயக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, விவசாய நிலங்களை சேதபடுத்திவரும் யானைகள் கூட்டத்தை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாயம் கேட்கும் விவசாயிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளை வனத்துறையினர் திரும்ப பெற வேண்டும். யானைகளால் ஏற்பட்ட பயிர் சேதத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும், யானைகள் விரட்டுவதில் அலட்சியம் காட்டும் வனத்துறையினரை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த, ஓசூர் சார் ஆட்சியர் பிரவீன் நாயர், டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகளிடம் சமாதான பேச்சு நடத்தினர். அப்போது, யானைகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால், இப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
யானைகள் ஆனந்த குளியல்
விவசாய பயிர்களை சேதம் செய்த யானைகள் கூட்டம், கோனேரிப்பள்ளி அருகேயுள்ள பிள்ளைகொத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் குட்டிகளுடன் குளியல் போட்டது.
பின்னர் பத்தகோட்டா, சப்பகிரி கிராமத்தின் வழியாக மீண்டும் போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு சென்றது. அப்போது, குக்கனப்பள்ளி எனுமிடத்தில் யானைகள் சாலையைக்கடந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT