Published : 18 Oct 2013 03:26 PM
Last Updated : 18 Oct 2013 03:26 PM
கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரையில் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொழுது போக்குக்காக பொது மக்கள் வருவதுண்டு. இதே போன்று கடலை ஒட்டிய பகுதிகளான புதுச்சத்திரம், பெரியக்குப்பம், தாழங்குடா, ராசாப்பேட்டை, பரங்கிப்பேட்டை, தொட்டிக்குப்பம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கும் மக்கள் செல்கின்றனர்.
இக் கிராமங்களின் வழியாக கடற்கரைக்கு செல்லும் இளைஞர் கள் ஆர்வம் காரணமாக கடலில் இறங்கிக் குளிக்கும்போது, எதிர் பாராத விதமாக கடல் அலையில் சிக்கி இறக்க நேரிடுகிறது. கடலூரை அடுத்த புதுச்சத்திரத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் புதன்கிழமை குழுவாக புதுச்சத்திரம் கடற்கரையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது பூச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் (21), புதுச்சத்திரத்தைச் சேர்ந்த சேகர் மகன் கார்த்தி (21) மற்றும் அவரது சகோதரர் விஜய் (17) ஆகியோர் கடல் அலையில் சிக்கி இறந்துள்ளனர்.
இதேபோன்று ஜூன் மாதம் 25-ம் தேதி நெய்வேலியிலிருந்து 9 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று புதுச்சத்திரம் கடற்கரை பகுதியில் குளித்தபோது, ஆதர்ஸ், கலையரசன் மற்றும் மரிய செபஸ்டியன் எனும் இளைஞர்கள் கடலில் மூழ்கி இறந்துள்ளனர். இதில் மரிய செபஸ்டியன் உடல் இதுவரை கிடைக்கவில்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
கடந்த ஓராண்டில் மட்டும் 25-க்கும் மேற்பட்டோர் அலையால் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பதாக தேவனாம்பட்டினம், புதுச்சத்திரம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.
தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ஆனந்தன் கூறுகையில், “இந்தகைய விபத்துகள் பெரும்பாலும் விடுமுறை தினங்களில்தான் நடக்கின்றன. வீட்டில் யாருக்கும் தெரியாமல் விடுமுறை நாட்களில் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்கள் குழுவாக கடற்கரைக்கு வந்து குளிக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கிக் கொள்கின்றனர்.
இங்கு வரும் இளைஞர்களுக்கு நீச்சல் தெரியாததாலும், கடலின் அமைப்பு, ஆழம் தெரியாததாலும் இத்தகைய விபத்துகள் நிகழ்கின்றன.
முக்கியமான பகுதிகளில் எச்சரிக்கைப் பலகைகளை வைத்தால் கடலில் இறங்கிக் குளிப்பவர்கள் சற்று கவனமுடன் இருக்க வாய்ப்புள்ளது. கடலின் ஆழமான பகுதிகளையும், ஆபத்தான பகுதிகளையும் கண்டறிந்து அப்பகுதியில் யாரும் இறங்க வேண்டாம் என்றும், இதுவரை நிகழ்ந்த விபத்துக்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட்டு எச்சரிக்கைப் பலகைகளை வைக்கும் பட்சத்தில் இதுபோன்ற விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது” என்றார்.
கடலோர காவல் நிலைய போலீசார் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டால் கடலில் குளிக்க வருபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வாய்ப்புண்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT