Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 5 லட்சத்து 38 ஆயிரத்து 233 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. விடுபட்ட குழந்தைகளுக்காக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படும்.
நாடு முழுவதும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் மணலி, பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய 4 மண்டலங்களை தவிர 11 மண்டலங்களில் 25 நடமாடும் மையங்கள் உள்பட 1,325 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் செயல்பட்டன.
இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களை, சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்துக்கு உள்பட்ட கொளத்தூர் நலவாழ்வு மையத்தில் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.
காலை 7 மணி முதல், மாலை 5 மணி வரை செயல்பட்ட முகாம்களில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 102 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 5 லட்சத்து 38 ஆயிரத்து 233 குழந்தைகளுக்கு மட்டுமே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் 93.4 சதவீத குழந்தைகளுக்கே போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட குழந்தைகளுக்காக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம், ஷாப்பிங் மால்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20, 21) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் செயல்பட உள்ளன.
அதுமட்டுமல்லாமல், வரும் சனிக்கிழமை வரை சுகாதாரப் பணியாளர்கள், குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று போலியோ சொட்டு மருந்துகளை கொடுப்பர் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT