Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 04 Jan 2014 12:00 AM

மகேந்திரகிரி மையம் தன்னாட்சி பெறுமா?

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி-யின் 60 சதவீதப் பணிகள் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தில் நடந்து வருகிறது. நாளை (ஜனவரி 5-ம் தேதி) நாடே எதிர்பார்க்கும் ஜி.எஸ்.எல்.வி - டி-5 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ள நிலையில், மகேந்திரகிரி மையத்தைத் தன்னாட்சி பெற்ற அமைப்பாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

மகேந்திரகிரி, வலியமலா (கேரளா) மற்றும் பெங்களூரில் இஸ்ரோவின் திரவ இயக்கத் திட்ட மையங்கள் அமைந்துள்ளன. இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது திரவத் திட்ட மையத்தின் தந்தை என்றழைக்கப்பட்ட முனைவர் முத்துநாயகம் தலைமையில் இம்மையங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

தமிழகத்தின் ஒரே மையமான மகேந்திரகிரி திரவ இயக்கத் திட்ட மையம், கேரளாவின் வலியமலாவின் மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

1994-ம் ஆண்டு வரை இங்கு நிர்வாக ரீதியான பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால், அப்போது இதன் இணை இயக்குநராக இருந்த நம்பி நாராயணன் மீது வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி மத்தியப் புலனாய்வுத் துறை கைது செய்தது. முனைவர் முத்துநாயகமும் கடல்சார் துறைக்கு மாற்றப்பட்டார். நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபணமாகி, உச்ச நீதிமன்றம் அவரை விடுவித்ததுடன், அவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிட்டது.

அப்போதிருந்து மகேந்திரகிரி மையத்துக்குப் பிரச்சினைகள் தொடங்கின. பணியாளர்கள் குறைக்கப்பட்டனர். புதிய பணியிட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. பலர் வலியமலா மையத்துக்குக் காரணமின்றி இடமாற்றம் செய்யப்பட்டனர். நிதி ஒதுக்குவது, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் இந்த மையம் புறக்கணிக்கப்பட்டது.

திரவ இயக்கத் திட்ட மையங்களின் உயர் மட்டக் குழுவில் மூன்று மையங்களைச் சேர்ந்த அதிகாரிகளே சம எண்ணிக்கையில் உறுப்பினர்களாக இருப்பர். ஆனால், தற்போது 14 உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே மகேந்திரகிரி சார்பிலான உறுப்பினர். மாறாக, வலியமலாவில் இருந்து 11 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஊழியர்கள் பேசுகையில், “இஸ்ரோவில் அனைத்து மையங்களும் பெங்களுரில் உள்ள தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளலாம். ஆனால், மகேந்திரகிரி மையம் மட்டும், வலியமலா மையம் மூலமாகவே தலைமையகத்தை அணுக முடியும். அந்த மையம் எங்களுக்கு இடைத்தரகர் போல உள்ளது. இதனால், எங்களது கோரிக்கைகள் எதுவும் தலைமையகத்துக்குச் சென்றடைவது இல்லை.

இதனால், மகேந்திரகிரி மையத்தைத் தன்னாட்சி பெற்ற மையமாக அறிவிக்கக் கோரி போராட்டங்களை நடத்தினோம். திருநெல்வேலி எம்.பி ராமசுப்பு மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நாளை (5-ம் தேதி) விண்ணில் ஏவப்பட உள்ள ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்டின் க்ரையோ ஜெனி என்ஜின் இங்குதான் தயாரிக்கப் பட்டது. அதனுடைய வெற்றியைத் தொடர்ந்து மகேந்திரகிரி தனி மையமாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். அதேநேரம் கிளை மையமாக அறிவித்து, மீண்டும் வலியமலாவின் கட்டுப்பாட்டிலேயே கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது” என்றனர்.

மகேந்திரகிரியின் உலகச் சாதனைகள்!

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு க்ரையோஜெனி என்ஜினை மகேந்திரகிரியில் தயாரித்தபோது அதனை 700 வினாடிகள் endurance test எனப்படும் தொடர் சோதனை ஓட்டத்தை விஞ்ஞானிகள் நடத்திக்காட்டினர்.

இது ரஷ்யாவிலும்கூட நிகழ்த்தப்படாத ஒன்று. இதன் பின்பு 2010-ல் ஜி.எஸ்.எல்.வி. டி -3 தோல்வியடைந்தது. இது மகேந்திரகிரி மையத்துக்குப் பெரும் சவாலை அளித்தது. அதனால், புதிய க்ரையோஜெனி என்ஜின் இங்குத் தயாரிக்கப்பட்டது.

இஸ்ரோ இதனைத் தயாரிக்க முடியாது என்று கருதிய ரஷ்யா, தான் அதை தயாரித்துத் தருவதாகச் சொல்லி ரூ. 400 கோடியும், நான்கு ஆண்டு அவகாசமும் கேட்டது. ஆனால், மகேந்திரகிரி விஞ்ஞானிகள் அந்த என்ஜினை ஒரு ஆண்டுக்குள்ளாகவே வெறும் 25 கோடி செலவில் வெற்றிகரமாகத் தயாரித்தனர்.

தமிழக முதல்வர் கவனிப்பாரா?

* மகேந்திரகிரி மையத்தை அமைக்க அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சுமார் 2000 ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால், விரிவாக்கத்தை மனதில் கொண்டு 7000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கினார். தன்னாட்சி பெறுவதால் மட்டுமே விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் வேகம் பெறும். எனவே, தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

* க்ரையோஜெனி என்ஜின்களை இஸ்ரோ சொந்தமாக தயாரிக்க முடிவு செய்து, அப்பணிகள் மகேந்திரகிரியிலும் வலியமலாவிலும் மாறி மாறி நடந்தது. இதனால், சரியான புரிதல் இல்லாததால் அதை தயாரிக்க 20 ஆண்டுகள் தேவைப்பட்டது. தயாரிப்புக்கான உலகளாவிய சராசரி காலக்கெடு நான்கு ஆண்டுகள் மட்டுமே. மகேந்திரகிரி தன்னாட்சி பெற்றால் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் க்ரையோஜெனி உள்ளிட்ட என்ஜின்களையும் தயாரிக்கலாம்.

* திரவ இயக்கத் திட்ட மையங்களில் உலகின் முன்னணியில் இருப்பது கலிபோர்னியாவில் இருக்கும் நாசாவின் Jet propulsion Laboratory தான். மகேந்திரகிரியில் தேவையான இடமும், திறமைமிக்க பொறியாளர்களும் இருக்கும் நிலையில், உலகின் முன்னணி திரவ இயக்கத் திட்ட மையமாக இது உருவாகும். 2018 -2020-க்குள் இஸ்ரோ விண்ணில் செலுத்தவிருக்கும் ஜி.எஸ்.எல்.வி. - எம்.கே - 3-க்கான சி.இ - 20 க்ரையோஜெனி என்ஜின் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே இங்கு வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்டதே இதற்குச் சான்று.

* கூடுதல் நிதி ஒதுக்கீடு, வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் உள்ளூர் மக்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x