Published : 11 Feb 2014 07:51 PM
Last Updated : 11 Feb 2014 07:51 PM

பழனியில் கி.பி. 13-ம் நூற்றாண்டு மன்னர் கால நாணயம் கண்டெடுப்பு

பழனியில் கி.பி. 13-ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டிய மன்னர் ஆட்சியில் பயன்படுத்தப்பட்ட நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்தவர் சுகுமார் போஸ். இவர் பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறார். இவர், கி.பி. 13-ம் நூற்றாண்டில் பயன்பாட்டில் இருந்த நாணயத்தை திங்கள்கிழமை கண்டெடுத்துள்ளார். இந்த நாணயத்தை, பழனி தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கி.பி. 13-ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியன் மன்னர், பழனியை ஆட்சி செய்துள்ளார். சுகுமார் போஸ் கண்டுடெடுத்த இந்த நாணயம், சுந்தரபாண்டியன் ஆட்சியில் பயன்படுத்திய பழமையான அரிய நாணயம்.

இந்த நாணயம் முழுக்க முழுக்க பித்தளையில் செய்யப்பட்டுள்ளது. நாணயத்தின் முகப்பில் சுந்தரன் என்ற பெயர் இரண்டு வரிகளில் மடக்கி எழுதப்பட்டுள்ளது. நாணயத்தின் மறுபக்கம் பாண்டியப் பேரரசின் அரசு முத்திரையான "இணைகயல் செண்டு' பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தின் இரு பக்கங்களும் தேய்ந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தின் எடை 800 மில்லி கிராம் உள்ளது. நாணயத்தின் குறுக்கு விட்டம், 15 மில்லி மீட்டராக உள்ளது. பழனியை கொங்குச் சோழர்களும், பாண்டிய மன்னர்களும் மாறிமாறி ஆட்சி செய்துள்ளனர். அதனால், பழனி சுற்றுவட்டார பகுதியில் சுந்தர பாண்டிய மன்னனின் கல்வெட்டுகள் அதிக அளவு கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது முதல்முறையாக சுந்தர பாண்டியன் ஆட்சி கால நாணயங்களும் கண்டெடுக்கப்பட் டுள்ளன. இது 13-ம் நூற்றாண்டு மக்களைப் பற்றிய பல்வேறு ஆய்வுகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x