Published : 12 Jan 2014 12:00 AM
Last Updated : 12 Jan 2014 12:00 AM
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை மதுரை வந்த ஜி.கே.வாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ’’மத்தியில் அமைந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு 2004, 2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் வெற்றிபெற்று, நாட்டில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், கட்டாயக் கல்வி, அனைவருக்கும் உணவு, கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க காங்கிரஸ் கூட்டணிக்கு இதுபோன்ற சாதனைத் திட்டங்கள் அடித்தளமாக அமையும் என நம்புகிறேன்.
காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தல்களில் மதச் சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தற்போதும் அதுபோன்ற கூட்டணியை அமைத்து மீண்டும் ஆட்சியை அமைப்போம். தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை இப்போது கூற முடியாது. தேர்தல் சமயத்தில் அறிவிப்போம்.
அமெரிக்காவில் பணியாற்றிய துணைத் தூதர் தேவயானி நாடு திரும்பியுள்ள விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT