Last Updated : 07 Apr, 2016 10:41 AM

 

Published : 07 Apr 2016 10:41 AM
Last Updated : 07 Apr 2016 10:41 AM

அதிமுக வேட்பாளர் பட்டியல் மாற்றங்களும் பின்னணியும்

| அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஒரே நாளில் 3 முறை மாற்றம்: செம்மலை, ஓ.எஸ்.மணியன், சி.ஆர்.சரஸ்வதி உட்பட 12 பேருக்கு வாய்ப்பு |

அதிமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒரே நாளில் 12 பேர் மாற்றப்பட்டுள்ளனர். சீனியர்களான செம்மலை, ஓ.எஸ். மணியனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 227 தொகுதிகள் அதிமுகவுக்கும், 7 தொகுதிகள் தோழமை கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போதைய எம்எல்ஏக்களில் 49 பேர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அதேபோல, புதுச்சேரி மாநிலத்துக்கான 30 வேட்பாளர்கள் பட்டியலும் வெளியானது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.ஜி.முத்துராஜாவுக்கு பதிலாக, அந்த தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின. அதன்படி, வேட்பாளர்கள் அனைவரும் நேற்று போயஸ் தோட்டத்துக்கு வந்தனர். ஆனால், அவர்கள் முதல்வரை சந்திக்கவில்லை. தாங்கள் எடுத்து வந்த பூங்கொத்துகளை அங்கிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

வேட்பாளர்கள் வந்து கொண்டிருந்தபோதே, கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து 2-வது வேட்பாளர் மாற்ற அறிவிப்பு வெளியானது. அதில், தமிழகத்தில் 7, புதுச்சேரியில் 3 என 10 வேட்பாளர்கள் மாற்றப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

அதன்படி, தி.நகர் தொகுதி வேட்பாளர் சரஸ்வதி ரங்கசாமி மாற்றப்பட்டு, அங்கு தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினருமான பி.சத்திய நாராயணன் என்ற தி.நகர் சத்தியா நிறுத்தப்பட்டுள்ளார்.

மேட்டூர் தொகுதிக்கு அ.சந்திரசேகரனுக்கு பதில் முன்னாள் எம்.பி.யான செ.செம்மலையும், காட்டுமன்னார்கோவிலில் எம்.கே.மணிகண்டனுக்கு பதில் தற்போதைய எம்எல்ஏ என்.முருகுமாறனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பூம்புகார் தொகுதிக்கு ஏ.நடராஜனுக்கு பதில் தற்போதய எம்எல்ஏ எஸ்.பவுன்ராஜ், வேதாரண்யத்தில் ஆர்.கிரிதரனுக்கு பதில் மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஓ.எஸ்.மணியன், மன்னார்குடியில் டி.சுதாவுக்கு பதில் நீடாமங்கலம் ஊராட்சி 13- வது வார்டு உறுப்பினர் எஸ்.காமராஜ், நாகர்கோவில் தொகுதியில் வி.டாரதி சேம்சனுக்கு பதில் தற்போதைய எம்எல்ஏ ஏ.நாஞ்சில் முருகேசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில்..

புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதியில் ஜி.சபாபதிக்கு பதில் எம்.சங்கரும், திருநள்ளாறு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.ஏ.யு.அசனா, காரைக்கால் தெற்கு தொகுதியில் வி.கே.கணபதிக்கு பதிலாகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருநள்ளாறு தொகுதியில் ஜி.முருகையன் நிறுத்தப்பட்டுள்ளார்.

3- வது, 4-வது மாற்றம்

இதைத் தொடர்ந்து மாலையில் அடுத்தடுத்து 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர். பல்லாவரம் தொகுதி வேட்பாளர் சி.வி.இளங்கோவனுக்கு பதில், மகளிர் அணி துணைச் செயலாளரான சி.ஆர்.சரஸ்வதியும், மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.பாண்டியனுக்கு பதில் மாநகராட்சி மேயரான வி.வி.ராஜன் செல்லப்பாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 3 முறை வேட்பாளர்கள் மாற்றப்பட்டது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பதவி பறிப்பு

இதற்கிடையே, நாகை மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் ஜெயபால் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படவில்லை. நேற்று நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஜெயபால் பங்கேற்றார். கூட்டம் முடிந்த நிலையில், அவரது மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, மாநிலங்களவை முன்னாள் எம்.பி. ஓ.எஸ்.மணியனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை வேட்பாளர் மாற்றம் என்பது வழக்கமான ஒன்றுதான். கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில், வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தேமுதிகவுக்காக மீண்டும் பட்டியல் மாற்றப்பட்டது. இது தவிர ஒரு சில வேட்பாளர்களும் மாற்றப்பட்டனர்.

தற்போது மாற்றப்பட்டுள்ள வேட்பாளர்களில் 3 பேர் பெண்கள். இந்த மாற்றத்தால் தற்போதைய எம்எல்ஏக்கள் 2 பேருக்கும் சீனியர்களான செம்மலை, ஓ.எஸ்.மணியன் ஆகியோருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாற்றம் தொடரும்

அதிமுக வேட்பாளர் பட்டியலில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்படும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, "அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் பலர் மீது புகார்கள், மாற்றம் தொடர்பான கோரிக்கைகள் போயஸ் தோட்டத்துக்கு நேரடியாகவும், இ-மெயில் மூலமும் வருகின்றன. இவை பரிசீலிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படுகிறது. முடிவில், உண்மை இருப்பின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதுதவிர, தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதால், மேலும் 20 வேட்பாளர்கள் வரை மாற்றப்படலாம்" என்றார்.

கைபேசியால் சீட் போனது

பம்மல் நகர்மன்றத் தலைவர் சி.வி.இளங்கோவன், பல்லாவரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, அங்குள்ள பள்ளியில் கொடியேற்றிய இளங்கோவன், ஒருகையில் கைபேசியை வைத்து பேசிக்கொண்டே கொடியேற்றியதால் சர்ச்சை கிளம்பியது. இதுபற்றி தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாலேயே வேட்பாளர் பட்டியலில் இருந்து அவரை நீக்கியதாக கூறப்படுகிறது.

| வியாழக்கிழமை காலை 10.30 மணி நிலவரம்:அதிமுக வேட்பாளர் பட்டியல் 5-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் மாற்றம் செய்து கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பென்னாகரம் தொகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் வேலுமணிக்கு பதிலாக புதிய வேட்பாளராக கே.பி.முனுசாமி நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல், வெப்பனஹள்ளி தொகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கே.பி.முனுசாமிக்கு பதிலாக புதிய வேட்பாளராக மது என்கிற ஹேம்நாத் நிறுத்தப்பட்டுள்ளார். |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x