Last Updated : 29 Jun, 2016 09:20 AM

 

Published : 29 Jun 2016 09:20 AM
Last Updated : 29 Jun 2016 09:20 AM

பெரம்பூர் கால்பந்து விளையாட்டு வீரர்கள்: ஆடுகளத்துக்காக 20 ஆண்டுகளாக ஏங்கித் தவிப்பு

வசதிகள் இருந்தும் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கும் வியாசர்பாடி கால்பந்து மைதானம்

ஆடுகளத்துக்காக 20 ஆண்டுகளாக சென்னை பெரம்பூர் மேட்டுப்பாளையம் அருந்ததியர் நகர் பகுதி கால்பந்து விளையாட்டு வீரர்களும், மாணவர்களும் ஏங்கித் தவிக்கின்றனர்.

அதேநேரத்தில் அனைத்து வசதிகளு டன்கூடிய வியாசர்பாடி கால்பந்து விளையாட்டு மைதானம் பராமரிப்பின்றி மூடிக்கிடக்கிறது.

சென்னையில் கால்பந்து விளை யாட்டு வீரர்கள் நிறைந்த பகுதி வட சென்னைதான். 40 ஆண்டுகளுக்கு முன்பு பி அண்ட் சி மில் மைதானமே இந்த வீரர் களின் சிறந்த ஆடுகளமாக இருந்தது.

அங்கு பயிற்சி எடுத்த பல பேர் மாநில, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று, விளையாட்டு இடஒதுக்கீட்டில் உயர்கல்வியில் சேர்ந்தனர். பலர் அரசு வேலையில் உள்ளனர்.

12 வயது முதல் 25 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வமாக இருக்கின்றனர். போதிய வசதியுடன் விளையாட்டு மைதானம் இல்லாததால் அவர்களால் கால்பந்து விளையாட்டில் பிரகாசிக்க முடியவில்லை. குக்ஸ் சாலை, கோவிந்தன் தெரு, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பில் போலீஸ் பூத் பின்பகுதியில் உள்ள சிறிய மைதானமே இவர்களது ஆடுகளம்.

மேட்டுப்பாளையம், கே.எம்.கார்டன், மங்களபுரம் பகுதிகளைச் சேர்ந்த 50 பேருக்கு இந்த மைதானத்தை விட்டால் வேறு வழியில்லை. மைதானத்தில் குண் டும் குழியுமாக இருக்கும் ஆடுகளம் வீரர் களை அவ்வப்போது பதம் பார்க்கிறது. ஆடுகளம் உள்ளே கழிவுநீர் கால்வாய் செல்வதால் துர்நாற்றம் வேறு அடிக்கிறது.

இதுகுறித்து கால்பந்து பயிற்சியாளர் கள் வேலு, மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது:-

இங்கு விளையாட வருபவர்கள் அனை வரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களால் கால்பந்தாட்டத்துக்கான ஆடை, பூட் வாங்க முடிவதில்லை. வேப்பேரியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானம், ஐ.சி.எப். விளையாட்டு மைதானம், சேத்துப்பட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு மைதானம் போன்றவற்றில் பணம் கட்டி பயிற்சியில் சேர முடியாது. அதனால் மேட்டுப்பாளையம் பகுதியில் போதிய வசதியுடன் பெரிய ஆடுகளம் அரசு அமைத்துக் கொடுத்தால் சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்க முடியும். இவ்வாறு கூறினார்கள்.

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் யூகேஷ் கூறியதாவது:

இந்த மைதானம் சிறியதாக இருப்ப தால் நீண்டநேரம் விளையாடி பயிற்சி எடுக்க முடியவில்லை. எனக்கு தினமும் அரை மணி நேரம் மட்டுமே கிடைக்கும். தினசரி பயிற்சி எடுத்தால்தான் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியும். இங்கு விளையாடும் போது நாங்கள் அடிக்கும் பந்து பெரம்பூர் நெடுஞ்சாலையில் போய் விழுந்தால் பஸ் அல்லது லாரி மோதி பந்து உடைந்து விடும். ஒரு பந்தின் விலை ரூ.550. சில நேரம் பந்து வாங்க முடியாமல்கூட சிரமப்படு வோம். பந்து யார் மேலாவது விழுந்துவிட் டால் அவர்கள் போலீசில் புகார் கொடுக் கின்றனர். அதன்பிறகு விளையாடுவதற்கு போலீஸார் அனுமதிப்பதில்லை. ஆர்வம் இருந்தும் கால்பந்து விளையாட்டில் சாதிக்க முடியவில்லை என்று வேதனை யாக இருக்கிறது என்றார் யூகேஷ்.

இதுகுறித்து தேவை அமைப்பின் ஒருங் கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில், “வியாசர்பாடி 46-வது வார்டில் உள்ள 3 ஆயிரத்து 700 சதுரஅடி கொண்ட சாமந்திப்பூ காலனி விளையாட்டு மைதா னத்தைப் புதுப்பிக்க 2012-ல் ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது சென்னை மாநகராட்சி. இயற்கை புல்தரை, கழிப் பறை, மின்விளக்குகள், இருக்கை வசதி, ஓய்வறை போன்றவை ஏற்படுத்தப்பட்டன. புதுப்பிக்கப்பட்ட இந்த கால்பந்து விளை யாட்டு மைதானத்தை கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மேயர் சைதை துரைசாமி திறந்து வைத்தார். இரண்டே நாளில் மைதானம் மூடப்பட்டது. கடந்த ஜனவரி வரை திறக்கப்படவில்லை. இதுகுறித்து மாநக ராட்சி அதிகாரியிடம் புகார் கொடுத்ததால், அடுத்த ஒரு மாதம் வரை மைதானம் திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் மூடப்பட்டுள்ளது. புல்தரை காய்ந்து போய் பராமரிப்பின்றி பயனற்றுக் கிடக்கிறது.” என்றார் இளங்கோ.

வடசென்னையில் ஒருபுறம் பெரம் பூர் மேட்டுப்பாளையம் பகுதி கால்பந்து விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு பெரிய மைதானம் இல்லை. மறுபுறம் வியாசர்பாடியில் உள்ள பெரிய மைதானம் பராமரிப்பின்றி மூடப்பட்டிருப்பதால் அங்குள்ள கால் பந்து வீரர்கள் முல்லைநகருக்கு போக வேண்டிய அவலம். இதனால் வடசென்னை கால்பந்து வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x