Published : 15 Sep 2016 09:07 AM
Last Updated : 15 Sep 2016 09:07 AM
நீர்நிலைகள் மாசுபடுவதால் அழியும் நிலையில் உள்ள அரிய வகை ஜசானா பறவைகளைக் காக்கும் முயற்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஈடுபட்டுள்ளார். தண்ணீரில் மிதக்கும் அவற்றின் கூடுகள் அழிவதைத் தடுக்க இரவு, பகலாக காவல் இருக்கிறார்.
பறவை இனத்தில் விசித்திரமான வாழ்க்கை முறையைக் கொண்டது ஜசானா பறவை. இவை குளங் கள், ஏரிகளில் உள்ள நீர்த் தாவரங் களின் மீது மிதக்கும் கூட்டை கட்டும். முட்டைகளை ஆண் பறவை களே அடைகாக்கும். நீர்நிலைகள் மாசுபடுவதாலும் தாமரை மலர் களும், இலைகளும் வியாபாரத்துக் காக அதிகமாக பறிக்கப்படுவ தாலும் இந்தப் பறவைகள் வேகமாக அழிந்து வருகின்றன.
குமரியில் அதிகம்
நீண்ட கால்களுடன் சிறிய காடை போன்று தோற்றமளிக்கும் இப் பறவை, நாட்டின் பிற பகுதிகளை விட கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரளவு அதிகம் உள்ளன. இவை குறித்து கடந்த 12 ஆண்டு களுக்கு மேலாக ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார் ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.டேவிட்சன். இவற்றின் கூடுகள் அழிவதைத் தடுக்கும் வகையில் நீர்நிலைகளில் இரவு, பகலாக கண்காணிப்பு மேற் கொள்கிறார். தங்களை அறியாமலே நீர்நிலைகளை மாசடையச் செய்வோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர், ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
“நீர்நிலைகளில் மிதக்கும் தாமரை, ஆம்பல் மற்றும் பிற நீர்த் தாவரங்களின் மீது மிதக்கும் கூட்டை கட்டுகிறது இப்பறவை. சிறிய அளவில் காற்று வீசினாலோ, மழையால் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டாலோ இவற்றின் மிதக்கும் கூடு கள் சேதமடைந்து, முட்டைகளும் குஞ்சுகளும் அழிந்துவிடும். பருந்து, ஆந்தை, வல்லூறு போன்ற பறவை களும் குஞ்சுகளை வேட்டையாடும். இதனால் 25 சதவீத குஞ்சுகள் தப்பு வதே சிரமம். குமரி மாவட்டத்தில் இவற்றின் எண்ணிக்கை 300-க்குள் மட்டுமே.
வேளாண்மைக்கு உதவி
இவற்றில் 5-க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், குமரி மாவட்டத்தில் சேவல்வால் ஜசானா, வெண்கல சிறகு ஜசானா ஆகிய 2 வகைகள் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஒல்லியாக இருப்பதால் நீர்த் தாவரங்கள் மீது எளிதாக நடந்து செல்லும். நெல் மற்றும் பிற தானிய பயிர்களில் காணப்படும் புழு, பூச்சிகளை அழிப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன. எனவே ஜசானாவை விவசாயிகளின் தோழன் என்பார்கள்.
மாசற்ற சுத்தமான நீர்நிலைகளில் மட்டுமே ஜசானா வாழும். இப் பறவைகள் இருந்தாலே அங்கு சிறப்பான சுற்றுச்சூழல் இருப்பதை உணர முடியும். நச்சுப்புகை, வாக னங்களின் ஒலி போன்றவற்றாலும் குப்பை, பிளாஸ்டிக் போன்றவற்றை நீர்நிலைகளில் கொட்டுவதாலும் இப்பறவையின் வாழிடங்கள் அச்சுறுத்தலைச் சந்திக்கின்றன.
தாமரை, ஆம்பல் பூக்கள் மற்றும் இலைகளைப் பறிப்போர் மற்றும் மீன் பிடிப்போர் இரவிலும் இப்பணியை மேற்கொள்வார்கள். அப்போது, ஜசானாவின் மிதக்கும் கூடுகள் அழிகின்றன. குமரி மாவட்டத்தில் குளங்கள் அதிகம் உள்ள புத்தளம், தெங்கம்புதூர், தேரூர் பகுதியில் இருப்போரிடம் இரவு, பகலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். நீர்நிலை களின் அருகே வசிப்போரிடமும் குப்பையை நீருக்குள் கொட்டாமல் இருக்க கேட்டுக்கொண்டுள்ளோம்” என்றார்.
அரியவகை வெண்கல சிறகு ஜசானா. (அடுத்த படம்) சேவல்வால் ஜசானா. (உள்படம்) ஓய்வுபெற்ற ஆசிரியர் எஸ்.எஸ்.டேவிட்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT