Published : 03 Feb 2014 07:55 AM
Last Updated : 03 Feb 2014 07:55 AM

தனியார் பால் மீண்டும் லிட்டருக்கு ரூ.2 உயர்வு: விலையைக் கட்டுப்படுத்த அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளன. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள நான்கு முன்னணி தனியார் நிறுவனங்கள் (திருமலா, டோட்லா, ஹெரிடேஜ், ஜெர்சி) கடந்த மாதம் 20-ம் தேதி பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தின.

தனியார் பால் நிறுவனமான ஆரோக்கியா ஏற்கெனவே கடந்த மாதம் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியது. தற்போது ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் ரூ.2 உயர்த்தி உள்ளது.

இதனையடுத்து மற்ற தனியார் நிறுவனங்களும் பால் விலையை மீண்டும் உயர்த்தக்கூடிய அபாயம் உள்ளது. பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்திய போதிலும், மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு ஆவின் பால் விலையை உயர்த்தவில்லை.

ஆனால் பால் கொள்முதல் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒரு முறை பால் விலையை போட்டி போட்டுக் கொண்டு உயர்த்தி வருகின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வரை ரூ.30 ஆக இருந்த ஒரு லிட்டர், 19ம் தேதி ரூ.2 உயர்ந்து ரூ.32 ஆக இருந்தது. பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி மேலும் ரூ.2 உயர்ந்து, ரூ.34 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆரோக்கியா நிறுவனம் மட்டும் ஞாயிற்றுக்கிழமை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி ரூ.36க்கு விற்பனை செய்கிறது.

இது குறித்து அடையாறு பகுதியில் வசித்து வரும் சூர்யா கூறுகையில், “தனியார் பால் பாக்கெட் நாள் ஒன்றுக்கு இரண்டு வாங்கினால் ரூ.38 செலவு செய்யவேண்டியுள்ளது. மாதம் ஒன்றுக்கு ரூ.1140 ஆகும். மாதம் 12 ஆயிரம் வருமானம் உள்ள எங்களை போன்ற குடும்பங்களுக்கு இது பெரிய செலவு தான்'' என்றார்.

“பெட்ரோல் விலை போல் பாலின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு போகிறது. மக்களின் தேவையை கருத்தில் கொண்டு அரசு பால் விலையை கட்டுப்படுத்த வேண்டும்’’ என்று தனியார் நிறுவன ஊழியர் சம்பத் கூறினார்.

டீக்கடை உரிமையாளர் ஜோசப் கூறுகையில் “அனைத்து டீக்கடை களிலும் தனியார் பால் பாக்கெட்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் பால் விலை உயர்ந்து கொண்டே போவதால் டீக்கடை தொழில் நஷ்டத்தில் இயங்கி வருகிறது'' என்றார்.

தமிழ்நாடு பால் முகவர்கள் நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். ஏ.பொன்னுசாமி கூறுகையில், “தனியார் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விலை உயர்வை கட்டுப்படுத்த மக்கள் பிரதிநிதிகள், பால் முகவர்கள் சங்கம், பால் நிறுவனங்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரி அடங்கிய நால்வர் குழுவை அமைக்கத் தமிழக அரசு முன்வரவேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x