Published : 06 Apr 2017 10:18 AM
Last Updated : 06 Apr 2017 10:18 AM

உள்ளாட்சி: அதிகார வர்க்கத்தை அலற வைக்கும் பிளான் பிளஸ் வெர்ஷன் 2- அதிகாரப் பரவல் திட்டங்களுக்கான மென்பொருள்

கேரளத்தில் அமைச்சர்கள் எங்கிருந் தார்கள் என்பதைப் பார்த்தீர்கள். கேரளம் மட்டும் அல்ல, அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர், அமைச் சர்கள் இவர்கள் அனைவருமே கிராமப் பஞ்சாயத்துகள் நடத்தும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்துக்கொள்ள வேண்டும்; அரசு திட்டங்களிலும் நிதியைக் கையாள் வதிலும் மக்கள் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது அனைத்து மாநிலங் களுக்கும் மத்திய நிதிக் குழு அளித்திருக்கும் பரிந்துரைகளில் ஒன்று. அதை கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் சிறப் பாக செயல்படுத்துகின்றன. நமது ஆட்சியாளர்கள் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள்.

அவர்கள் விவரம் இல்லாமலோ அல்லது செய்யத் தெரியாமலோ இப்படி வேடிக்கை பார்க்கவில்லை. அரசுத் திட்டங்களையும் செயல்பாடுகளையும் நிதி கையாள்கை களையும் மக்கள் மயப்படுத்தினால் ஆட்சியாளர்களால் சம்பாதிக்க முடியாது. கொள்ளையடிக்க முடியாது. திட்டத்துக்கான மொத்த தொகையையும் அப்படியே விழுங்கிவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக இடைத்தேர்தலில் ஓட்டுக்கு 4 ஆயிரம் கொடுக்க இயலாது. அதனாலேயே வேடிக்கை பார்க்கிறார்கள்.

அரசுத் திட்டங்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரவும், ஊழல் களைக் களையவும், மக்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தவும் கடந்த 2007-ம் ஆண்டு மத்திய திட்டக் குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய தகவல் தொடர்பு தொழில் நுட்பத் துறை அமைச்சகம் மென்பொருள் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தது. Plan Plus - Version 1 என்பது அதன் பெயர்.

உள்ளாட்சிகளில் நடக்கும் அதிகாரப் பரவல் அடிப்படையிலான அரசு திட்டங்களுக்கான மென்பொருள் செயலி இது. ஊரக உள்ளாட்சிகள், நகர உள்ளாட்சிகள், மாவட்டத் திட்டக் குழுக்கள், மத்திய, மாநில அரசுத் துறைகள், தொழில்நுட்ப அங்கீகாரக் குழுக்கள் ஆகியவை இணைந்து செயல்படும் விரிவான வலையகம் (Portal) இது. இந்த வலையகத்தில் மக்களும் பங்கேற்க முடியும் என்பதே இதன் சிறப்பு.

வலையகத்தில் மாவட்டங்கள், மாவட் டப் பஞ்சாயத்துகள், ஒன்றியங்கள், கிராமப் பஞ்சாயத்துகள் ஆகியவை வகைப்படுத்தப் பட்டிருக்கும். இதில் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் தலைவர், உறுப்பினர்கள், செயலர் விவரங்கள் பதியப்பட்டிருக்கும்.

தவிர, கிராமப் பஞ்சாயத்தில் செயல்படுத்தும் சேவைகள், திட்டங்கள், துறைசார் பணிகள், பயனாளிகள், மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டப் பணிகள் மற்றும் விவரங்கள், சொத்து வரி விவரங்கள், கிராமப் பஞ்சாயத்தின் நிலங்கள், நீர்நிலைகள், கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துக்கள், 12-வது நிதிக்குழு மானியம், 13 மற்றும் 14-வது நிதிக்குழு பரிந்துரைகள், கிராமப் பஞ்சாயத்துத் தொடர்பான ஏலங்கள், ஒப்பந்தங்கள், கிராமப் பஞ்சாயத்தின் நிதிநிலை அறிக்கைகள், ரசீதுகள், அரசுத் திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெற மக்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்களின் நிலைப்பாடு, சேவைகளைப் பெற தொடர்பு கொள்ள வேண்டிய அரசு அலுவலர்கள், அவர்களின் தொடர்பு எண்கள், இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளும் வகையிலான விண்ணப்பங்கள் ஆகியவை இருக்கும்.

இவை தவிர, அந்த கிராமத்தின் குடிமக்கள் அந்த வலையகத்திலேயே தங்கள் கிராமத்துக்கு என்ன திட்டங்கள் தேவை? சேவைத் துறைச் சார்ந்த திட்டங்கள் என்ன வேண்டும்? உற்பத்தித் துறை சார்ந்த திட்டங்கள் என்ன வேண்டும்? எந்தெந்த நீர்நிலைகளை செப்பனிட வேண்டும்? விவசாயம் சார்ந்து என்ன பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்? கட்டிடங்கள் என்ன கட்டப்பட வேண்டும்? எந்த வகையிலான அரசு மருத்துவமனை தேவை? எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தேவை? எந்தத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்? எந்தத் திட்டங்கள் எல்லாம் தங்கள் கிராமத்துக்குத் தேவை இல்லை என்பது உட்பட ஏராளமான தகவல்களைப் பதிவுசெய்ய முடியும்.

இவ்வாறு சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் அனைத்துத் துறைச் சார்ந்த அலுவலர்கள் கூட்டம் அந்தக் கிராமப் பஞ்சாயத்தில் நடத்தப்படும். கிராம சபைக் கூட்டங்களில் மக்களின் ஆலோசனையும் திட்டங்களாக தீட்டப்படும். பின்பு, பல்வேறு கட்டங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும். இப்படியாக ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்து அளவிலும் ஐந்தாண்டு திட்டங்கள் தயாரிக்கப்படும்.

திட்டங்கள், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கும் துறைகள், நிதியைக் கையாள்பவர்கள், திட்டம் தொடங்கப்படும் நாள், முடிக்கப்பட வேண்டிய தேதி, ஒப்பந்ததாரர்கள், திட்டம் தொடர்பான அரசுத் துறைகள், துறைசார் அலுவலர்கள், அவர்களின் தொடர்பு எண்கள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு மொத்த விவரங்களும் அந்தச் செயலியில் பதிவேற்றப்படும். இதனை கிராம மக்கள் அனைவரும் பார்க்கலாம்.

இதன்படி கிராமப் பஞ்சாயத்து தொடங்கி மாநகராட்சிகள் வரை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நடக்கும் அரசுத் திட்டப் பணிகள் மக்கள் மேற்பார்வையுடன் நடக்கும். கணினி மென்பொருள் வழியாக நிதி முழுமையாக கையாளப்படுவதால் பத்து பைசா கூட ஊழல் செய்ய முடியாது. ஒப்பந்தங்கள் அனைத்தும் மென்பொருள் வழியாக கையாளப்படுவதால் ஊழல் பேர்வழிகள் உள்ளே வர முடியாது.

விவசாயிகளுக்கான உரம் மானியம், விதை மானியம், மின்சார மானியம், சொட்டு நீர்ப் பாசனத்துக்கான மானியம், வீடுகளுக்கு சூரிய மின்சக்தி சாதனங்களுக்கான மானியம் மற்றும் அரசு சேவை திட்டங்களில் பயனாளிகள் தேர்வு அனைத்தும் மென்பொருள் வழியாக முடிவு செய்யப்படும். இதனால், பெருமளவு ஊழல் குறையும். மொத்தத்தில் கண்ணாடி வீட்டைப் போன்ற திட்டம் இது. உள்ளே என்ன நடக்கிறது என்பதை யாரும் பார்க்கலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் உள்ளாட்சியின் அடிப்படை தத்துவமான மக்கள் பணத்தில் மக்களுக்காக, மக்களே நடத்தும் திட்டங்கள் இவை.

கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங் களில் செயல்பாட்டில் இருக்கும் இந்தத் திட்டத்தை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த மென் பொருளின் முழு வீச்சையும் அறிந்த அதிகாரிகள் அதிர்ந்தே போனார்கள். இதனை செயல்படுத்தினால் தங்களது மொத்த ‘பிழைப்பும்’ போய்விடும் என்று அஞ்சினார்கள். ஆட்சியாளர்களுக்கும் இது புரிந்தே இருந்தது.

மொத்தத்தில் பிளான் பிளஸ் மென்பொருள் செயலி வழியாக அரசுத் திட்டப் பணிகள் செயல்படுத்தபட்டால் ஆட்சியாளர்கள், அதிகாரிகள், அரசியல் வாதிகள், அரசியல் கட்சிகள், ஊழல் பேர்வழிகள் என மொத்த நிழல் உலகம் மீதும் வெளிச்சம் பாய்ந்துவிடும். அதனா லேயே அந்த மென்பொருள் திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். அப்படியும் நேர்மையான சில அதிகாரிகள் சில மாவட்டங்களில் முன்னோடி திட்டமாக அதை செயல்படுத்த முயன்றபோது அவர்களை வேறு இடங்களுக்குத் தூக்கி அடித்தார்கள்.

இதைத் தொடர்ந்து 14-வது நிதிக் குழு ‘இந்த மென்பொருளைப் பயன் படுத்தினால்தான் நிதியே கொடுப்போம்' என்று கண்டிப்புடன் சொன்னது. இதோ கடந்த 2016-ம் ஆண்டு Plan Plus - version 2 வந்துவிட்டது. வேறு வழியில்லாமல் அந்த மென்பொருளில் பணியாற்றுவது குறித்த பயிற்சிகள் தற்போது அளிக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் அந்த மென்பொருளை எப்படி ஏமாற்றி ஊழல் செய்யலாம் என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறது அதிகார வர்க்கம். ஆனால், பெருவாரியான மக்கள் பங்கேற்பின் மூலம் அதனை நாம் தடுக்க இயலும்.

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x