Published : 09 Jan 2014 09:50 AM
Last Updated : 09 Jan 2014 09:50 AM

சென்னையில் தினமும் 2 கோடி லிட்டர் குடிநீர்: லாரிகளில் கொண்டு வர ஏற்பாடு

பருவமழை ஆய்வு குறித்த கருத்தரங்கம் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சென்னையின் குடிநீர் நிலவரம் குறித்து சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் சந்திரமோகன் பேசியதாவது:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தற்போது நீர் இருப்பு குறைவாக உள்ளது.

இருப்பினும், வீராணம் ஏரியில் இருந்து தினமும் 18 கோடி லிட்டர், மீஞ்சூர், நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து 18 கோடி லிட்டர் தண்ணீர் கிடைப்பதால் நிலைமையை சமாளித்து வருகிறோம். மொத்த குடிநீர் தேவையில் 60 சதவீதம், இந்த இரண்டு நீர் ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது.

தற்போது குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளில் 333.70 கோடி கனஅடி, வீராணம் 0.720 டி.எம்.சி., மேட்டூர் அணை 29.124 டி.எம்.சி., கண்டலேறு அணை 33.060 டி.எம்.சி., கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் தினமும் 18 கோடி லிட்டர் தண்ணீர் உள்ளது. எனவே தட்டுப்பாடில்லாமல் தண்ணீரை விநியோகிக்க முடியும்.

இருப்பினும், இந்த ஆண்டு சென்னை குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், மீஞ்சூர், பஞ்சட்டி ஆகிய இடங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தினமும் 2 கோடி லிட்டர் தண்ணீரை லாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளோம்.

விவசாயக் கிணறுகளை வாடகைக்கு எடுத்து தினமும் 4 கோடி லிட்டர் நீர் பெறவும், நெய்வேலியில் கூடுதலாக 10 ஆழ்துளைக் கிணறுகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இக்கருத்தரங்கில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணை தலைமை இயக்குநர் ஒய்.ஏ.ராஜ் பேசுகையில், ‘தமிழ்நாட்டுக்கு தென்மேற்கு பருவமழை, வடகிழக்குப் பருவமழை மூலம் ஆண்டுக்கு சராசரியாக 92 செ.மீ. மழை கிடைக்கும். இந்த ஆண்டு 74 செ.மீ.தான் மழை பெய்துள்ளது.

இந்த ஆண்டு 32 நாட்கள் வரை காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் மையம் கொண்டிருந்தது. வெகு தொலைவில் இருந்ததாலும், வேகமாக கரையைக் கடந்துவிட்டதாலும் தமிழ்நாட்டுக்கு எதிர்பார்த்த மழைப் பொழிவு இல்லை என்றார்.

இக்கருத்தரங்கில், வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ரமணன் உள்ளிட்டோர் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x