Published : 12 Nov 2013 12:07 PM Last Updated : 12 Nov 2013 12:07 PM
திருச்சி: மணல் குவாரியால் மாயமாகும் கிராமப் பெண்கள்
திருச்சி மாவட்டம் வாத்தலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டூர் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிவரும் மணல் குவாரி காரணமாக பெண்கள், கால்நடைகள் பெரும் துயரத்தை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
திருச்சி - நாமக்கல் சாலையில் ஆமூர் அருகே காவிரிக் கரையோரம் அமைந்த பசுமையான ஊர் கோட்டூர். "பல ஆண்டுகளாக கோட்டூரில் இயங்கி வந்த மணல் குவாரி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆறு மாதங்களுக்கு முன் மூடப்படுவதாக அறிவிப்புச் செய்யப்பட்டது.
தொல்லை ஒழிந்தது என நாங்கள் சந்தோஷப்பட்டோம். அருகேயுள்ள ஆமூரில் புதிதாக மணல் குவாரி திறக்கப்பட்டது. ஆனாலும் மூடப்படுவதாக அறிவிப்பு மட்டும் செய்யப்பட்ட கோட்டூர் குவாரி சட்டவிரோதமாக அதிகாரிகளின் ஒத்துழைப்போடு தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
இந்தக் குவாரிகளில் பணிபுரியும் வடமாநில அடியாட்கள் அங்குள்ள பொதுமக்களுக்கு பலவிதமான தொல்லைகளைத் தருகின்றனர். ஆற்றங்கரைக்கு குளிப்பதற்காகவும் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காகவும் சென்ற மூன்று பெண்கள் கடந்த ஒன்றரை ஆண்டில் காணாமல் போயுள்ளனர். சுமார் 50 ஆடுகள், 5 மாடுகள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக காவல்துறையில் கொடுத்த புகார்கள் எதற்கும் நடவடிக்கையில்லை. கால்நடைகளை லாரிகளில் கடத்திச் சென்று விடுகிறார்கள். பெண்களுக்கு பாலியல் தொல்லை தருகின்றனர். பல பெண்கள் இந்தக் கொடுமையை வெளியே சொல்லவே தயங்குகிறார்கள். அதனால் நீதிகேட்டு மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வந்தோம்" என்றார் ஊர் முக்கியஸ்தரான பாலு.
"ஓராண்டிற்கு முன்பு ராமசாமி என்பவரின் மனைவியான சித்ரா (25) ஆற்றங்கரைக்குச் சென்றவர் காணாமல் போனார். காவல்துறையில் புகார் செய்தோம் இதுவரை அவர் என்ன ஆனார் என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை. கடந்த ஆண்டு கல்லூரி மாணவி ரஞ்சிதா (19) கல்லூரிக்கு பேருந்து ஏற ஆமூர் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றவர் காணாமல் போய்விட்டார். அவரையும் இதுவரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி ஆற்றங்கரையில் மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகளை ஓட்டிவருவதற்காகச் சென்ற ரவிச்சந்திரனின் மனைவி தமிழ்செல்வி (37) காணாமல் போய்விட்டார். அவரது செருப்புகள் மட்டும் ஆற்றங்கரையில் கிடந்தது. இதுபற்றியும் காவல்துறையில் புகார் செய்தோம். இன்றுவரை அவரைப் பற்றிய எந்த தகவலையும் காவல்துறை துப்பறியவில்லை.
எங்கள் ஊரில் இதற்குப் பிறகும் அசம்பாவிதங்கள் நிகழாதவாறு மாவட்ட ஆட்சியர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.அங்குள்ள சட்டவிரோத குவாரியை மூட உத்தரவிட வேண்டும்" என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள். கோட்டூர் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்சியரைச்ந்திக்க திரண்டு வந்தனர். அவர்களை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்க மறுக்கவே ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகையிட்டபடி உட்கார்ந்து தர்னா செய்தனர் அந்த ஊர் மக்கள்.
ஒரு மணி நேர தர்னாவுக்குப் பிறகு ஆட்சியர் வந்து பொதுமக்களிடம், "காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன். அந்தக் குவாரியை மூடுவதற்கும் ஏற்பாடு செய்கிறேன்" என உறுதி யளித்த பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
WRITE A COMMENT