Published : 20 Jul 2016 11:34 AM
Last Updated : 20 Jul 2016 11:34 AM

6 மாதமாக இயங்காத வேளாண் பல்கலையின் சமுதாய வானொலி: சர்ச்சையை கிளப்பும் அலுவலர்கள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நடத்தி வந்த சமுதாய வானொலி கடந்த 6 மாதங்களாக இயங்காமல் இருப்பது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

10 முதல் 18 கிமீ தொலைவு சுற்று வட்டத்துக்கு மட்டுமே கேட்கக்கூடிய வகையிலான சமுதாய வானொலி நிலையங்கள் அந்தந்த பகுதி மக்கள் பிரச்சினைகள், தொழில் மற்றும் பொருளாதார கலாச்சார விஷயங்களை பேசுகின்றன.

சமுதாய வானொலியின் முக்கியக் குறிக்கோள், அந்தந்தப் பகுதியிலுள்ள சமுதாய மக்களை ஒருங்கிணைத்து செயல்படுவதேயாகும். இந்த வானொலிக்கான அனுமதியை தகுதிவாய்ந்த கல்வி மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வழங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட சமுதாய வானொலி நிலையங்கள் சென்னை, கோவை, திருச்சி, நாகை, திண்டுக்கல், நாமக்கல், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படுகின்றன.

கோவையை பொறுத்தவரை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒன்றும், 3 தனியார் கல்லூரிகளிலும் சமுதாய வானொலி சேவை இருந்து வந்தது. தற்போது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வானொலி ஒலிபரப்பு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட, அது மூடுவிழா கண்டுவிடுமோ என கேள்வி எழுப்புகின்றனர் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் வானொலி நேயர்கள் சிலர்.

இது குறித்து பல்கலைக்கழக அலுவலர்கள் கூறியதாவது.

2010-ம் ஆண்டில் வேளாண் பல்கலையில் சமுதாய வானொலி 107.4 பண்பலை வரிசையில் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.25 ஆயிரம் ரூ.12 ஆயிரம், ரூ.8 ஆயிரம் மற்றும் ரூ.3500 ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் அலுவலர்களும், தற்காலிக பணியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். 50 சதவீதம் சமூகத்திற்கும், 50 சதவீதம் முழுவதும் விவசாயத்துக்கும் என நிகழ்ச்சிகள், தகவல்கள் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தன.

சமூகம் என்று பார்த்தால் கல்வி, ஆளுமை, மருத்துவம், சுற்றுச்சூழல், இசை, குழந்தைகளுக்கு என்றும், வேளாண்மைக்கு என வரும்போது, விவசாயிகளின் வெற்றிக்கதைகள், வேளாண் விஞ்ஞானிகள் பேட்டி, புதிய தொழில்நுட்பங்கள், விவசாயிகள் கேள்வி-பதில், வேளாண் மாணவர்கள் கேள்வி பதில் கலந்துரையாடல் என ஒலிபரப்பப்பட்டது.

இப்படியிருக்க இதன் முதன்மை பணியில் இருந்த ஒருவர் பணியை விட்டு வெளியேறினார். அவர் இருந்த இடத்துக்கு தனக்கு வேண்டியவரை நியமிக்க உயர் அதிகாரி ஒருவர் முயற்சித்தார். அது நடக்கவில்லை. தொடர்ந்து கீழ்மட்ட பணியில் இருந்த இருவர் வெளியேற்றப்பட்டனர். அடுத்தகட்டமாக கடந்த ஜனவரி மாதம் மற்றவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

அவர்களுக்கு சில மாதங்கள் சம்பளம் கூட அளிக்கவில்லை. அதிலிருந்தே இங்குள்ள சமுதாய வானொலி இயங்குவதில்லை. இது பற்றி கேட்டால் இங்கு பொறுத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மீட்டர் பேசிக் மாடல். அது பழுதாகி விட்டது. அதை சரிப்படுத்த வேண்டும். அதற்கு மேலிட அனுமதி கோரப்பட்டுள்ளது என்கிறார்கள் இதன் பொறுப்பாளர்கள். அது ஒன்றும் பெரிய அளவில் செலவு பிடிக்கக்கூடிய விஷயமல்ல. ஊழியர் சம்பளமும் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம்தான் வருகிறது.

கோடிக்கணக்கான பணத்தை ஆராய்ச்சிக்காக செலவிடுகிற பல்கலைக்கழகம். எத்தனையோ கண்டுபிடிப்புகளை உலகுக்கு கொடுக்கிற மையம். ஆயிரக்கணக்கான மாணவர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகளை கொண்ட மையம், தன் செய்திகளை வெளியில் அதுவும் 15 முதல் 20 கிமீக்குள் சொல்லத்தக்க அளவிலான வானொலியை முடக்கி வைத்திருப்பது சரியானதுதானா?

இதே வேளாண் பல்கலைக் கழகம் இந்த சமுதாய வானொலியை மையமாகக் கொண்டு விழுப்புரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், விருதுநகர், திருநெல்வேலி என 6 மையங்களில் சமுதாய வானொலிகளை அமைக்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்ச கத்திடம் கேட்டிருந்தது. அதில் 2 மையத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால் இன்றுவரை அது அப்படியே இருக்கிறது. தாய் நிலையில் உள்ள சமுதாய வானொலியின் நிலையே இப்படி என்றால் அதை எப்படி தொடங்குவார்கள் என்று தெரியவில்லை என்றனர்.

இது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமியை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘ஒரு கருவி பழுதாகியுள்ளதால் சமுதாய வானொலி ஒன்றரை மாதமாக இயங்கவில்லை. அதை சரிசெய்ய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு எழுதியுள்ளோம். தேர்தல் வந்துவிட்டதால் இந்த பணியில் காலதாமதமாகிவிட்டது. இதற்கான நிதியை வரும் பட்ஜெட்டில்தான் ஒதுக்க முடியும். சீக்கிரமே சரிப்படுத்திவிடுவோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x