Published : 19 Mar 2014 12:00 AM
Last Updated : 19 Mar 2014 12:00 AM

அழகிரி வீழ்த்த நினைக்கும் அந்த 7 பேர்- விருதுநகரில் வைகோ, தேனியில் ஆரூணுக்கு ஆதரவு

‘ம.தி.மு.க தோன்றியபோது தென் மாவட்டங் களில் திமுக-வை கட்டிக் காத்தார்’ என்று கருணாநிதி அடிக்கடி மகனை மெச்சுவார். ஆனால் இந்தத் தேர்தலில் வைகோ-வின் வெற்றிக்காக அழகிரியே பிரச்சாரம் செய்வார் போலிருக்கிறது.

`தி.மு.க வந்தேறிகளின் கூடாரமாகி விட்டது’ என அழகிரி அடிக்கடி பேசிவந்த நிலையில், அ.தி.மு.க வந்தேறிகளான கே.கே.எஸ்.எஸ்.ஆரின் சிபாரிசில் விருதுநகரில் ரத்தினவேலுக்கும் கருப்பசாமி பாண்டியன் சிபாரிசில் நெல்லையில் தேவதாச சுந்தரத்துக்கும், திண்டுக்கல்லில் அதிமுக-விலிருந்து வந்த முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜனுக்கும் சிவகங்கையில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான சுப.துரைராஜுக்கும் தேனியில், ம.தி.மு.க-விலிருந்து வந்த பொன்.முத்துராமலிங்கத்துக்கும் இம்முறை வாய்ப்பளித்திருக்கிறது தி.மு.க.

இதுகுறித்து `தி இந்து’விடம் பேசிய அழகிரிக்கு நெருக்கமான விசுவாசிகள், ``பொன்.முத்து, மதுரை வேலுச்சாமி, காந்திராஜன், ரத்தினவேல், தேவதாச சுந்தரம், தூத்துக்குடி ஜெகன், ராமநாதபுரம் ஜலீல் இந்த 7 பேரையும் தோற்கடிக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறார் அழகிரி அண்ணன்.

மதுரையில் ஸ்டாலின் அணியை பலப்படுத்தியதில் பொன்.முத்துவுக்கு முழுப் பங்கு உண்டு. எனவே, அவரை வீழ்த்த தேனியில் காங்கிரஸ் கட்சியின் ஆரூணை ஆதரிக்கிறார் அழகிரி. தன்னைச் சந்தித்த ஆரூணிடம் சில ரகசிய வியூகங்களை சொல்லி அனுப்பி இருக்கிறார்.

இதே போல் திண்டுக்கல் ஐ.பெரியசாமி பதவிக்காக ஸ்டாலின் பக்கம் போய்விட்டார். அங்கே காந்திராஜனை வீழ்த்தி பெரிய சாமிக்கு பாடம் புகட்ட நினைக்கிறார் அழகிரி. நன்றி மறந்தவர் என்றாலும் மதுரை வேலுச்சாமி மீது கோபம் இல்லை. என்றாலும், கம்பம் செல்வேந்திரனைப் போல வேலுச்சாமியும் போட்டியிலிருந்து ஒதுங்காதது அண்ணனுக்கு வருத்தம். மதுரை தி.மு.க-வில் முக்கல்வாசிப் பேர் 17-ம் தேதி அண்ணன் கூட்டிய ஆலோ சனைக் கூட்டத்துக்கு வந்துவிட்டார்கள். பிறகெப்படி வேலுச்சாமி ஜெயிப்பார்?

கே.கே.எஸ்.எஸ்.ஆர். அமைச்சராக இருந்தபோதே அண்ணனை மதிக்க வில்லை. நேற்று வரை அண்ணனை சுற்றிக் கொண்டிருந்த ரத்தினவேல், கே.கே.எஸ். எஸ்.ஆரின் பேச்சைக் கேட்டு விருதுநகரில் போட்டியிடுகிறார். கே.கே.எஸ்.எஸ்.ஆரை வீழ்த்த தனது ஆதரவாளர்களை வைகோ-வுக்கு ஆதரவாக களப்பணி செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.

இதேபோல்தான் அண்ணனை மதிக்காத நெல்லை கருப்பசாமி பாண்டியனால் அடையாளம் காட்டப்பட்ட தேவதாச சுந்தரத்தை சாய்க்க, கட்சியைவிட்டு விலக்கப்பட்ட மாலைராஜா உள்ளிட்ட தனது விசுவாசிகளைத் தயார்படுத்துகிறார் அண்ணன். அழகிரியை உதாசீனப்படுத்திய சுப.தங்கவேலனின் சிபாரிசில் ராமநாத புரத்தில் கல்லூரி அதிபர் ஜலீலுக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள். தங்கவேலனுக்கு பாடம் புகட்டும் வேலையை ஜே.கே.ரித்தீஷின் ஆட்கள் பார்த்துக்கொள்வார்கள்.

அழகிரிக்குப் பிடிக்காத தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியை வீழ்த்த, அங்கே பெரியசாமியால் ஓரங் கட்டப்பட்ட திமுக-வினரைக்கொண்டு ஜெகனை வீழ்த்த வியூகம் வகுக்கப் போகிறார்’’ என்று சொன்னார்கள்.

அதுமட்டுமின்றி அழகிரி வீழ்த்த நினைப்பவர்களுக்கு எதிராக வில்லங்க மான பழைய விவகாரங் களை எடுத்து போஸ்டர்களை ஒட்டி கதிகலங்க வைக்கப் போகிறதாம் அழகிரி முகாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x