Published : 05 Jun 2017 12:40 PM
Last Updated : 05 Jun 2017 12:40 PM
பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக பால் உற்பத்தியில் 18.5 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. கிராமப் பொருளாதாரத்தை உயர்த்துவதில் விவசாயமும், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பு தொழிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அன்றாட குடும்பச் செலவுகளுக் கும், அவசர தேவைகளுக்கும் விவசாயிகளும், கால்நடை வளர்ப் போரும் தாங்கள் வளர்க்கும் பசு, காளைகளை விற்று தேவைகளை ஈடு செய்கின்றனர்.
இந்நிலையில், கால்நடை சந்தைகளில் பசு, காளைகள் இறைச்சிக்காக விற்கப்படுவதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. ஏற்கெனவே, வறட்சியின் பாதிப் பால் நடுத்தர, ஏழை மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பாராத மருத்துவச் செலவு, திருமணம், குழந்தைகள் படிப்பு போன்ற அவசர தேவைகளுக்கு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமலும் வட்டிக்கு கடன் பெற்றும் கடனாளியாகி வருகின்றனர்.
தற்போது பசு, காளைகளை விற்பதற்கு நிலத்தின் உரிமைப் பத்திரம், விவசாயி என்பதற்கான அடையாளச் சான்று, இறைச்சிக் காக விற்கவில்லை என்பதற்கான உறுதிமொழி சான்றுகளை வாங்க மத்திய அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதனால், கிராமப்புற பொருளாதாரமே பெரும் சரிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் பேராசிரியர் பீர் முகமது கூறியதாவது: ஒரு பசு சராசரியாக 6 முதல் 7 முறை கன்றுகள் ஈனும் வாய்ப்புள்ளது. 4 லிட்டர் அல்லது 5 லிட்டர் பால் கறக்க வாய்ப்புள்ளது. வருமானம் தரக்கூடிய இந்த உற்பத்தி திறனுள்ள பசு மாடு களையே விவசாயிகளால் பரா மரிக்க முடியும். வயதான, பால் தராத உற்பத்தித் திறனை இழந்த மாடுகளை விவசாயிகள் பராமரிக்க முடியாமல் விற்றுவிடுவது கிராமங்களில் இயல்பாக நடைபெறும். அந்த பணத்தை வைத்து புதிய மாடுகளை வாங்கி தொழிலை தொடர்வார்கள்.
தற்போது இறைச்சிக்காக விற்கக் கூடாது என்றால் ஒரு விவசாயி 10 பசு மாடுகள் வைத்திருந்து, அதில் 5 பசு மாடுகள் உற்பத்தித் திறன் இழந்தவையாக இருந்தால் அவற்றை எப்படி அவரால் பராமரிக்க முடியும்? ஒன்று இந்த கடுமையான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் அல்லது இந்த சிரமங்களைத் தவிர்க்க அரசே விவசாயிகளிடம் உற்பத்தித் திறன் இழந்த மாடுகளை குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்கி கிராமங்கள் தோறும் கோசாலைகளை ஆரம்பித்து பராமரிக்க வேண்டும். அறிவியல் பூர்வமாக சிந்திக்காமல் மத்திய அரசு அறிவித்துள்ள விநோதமான கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் மாடுகள் இல்லாத கிராமங்கள் ஏற்படும். பால் உற்பத்தியும் குறையும் என்று அவர் கூறினார்.
இன்னும் ஏழ்மைக்கு செல்லும் விவசாயிகள்
மதுரை மேலூர் வட்டார துல்லியப் பண்ணை விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: மத்திய அரசு உள்நோக்கத்துடன் இந்த கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளதாக கருதுகிறோம். விவசாய நிலம் வைத்திருப்பவர்கள் மட்டும் பசு, காளைகளை வளர்ப்பதில்லை. விவசாயம் செய்யாதவர்கள்கூட குடிசைத்தொழில் போல் பசுக்களை வளர்க்கின்றனர். சாதாரண சான்று வாங்கவே அரசு அலுவலகங்களில் நாள்கணக்கில் அலைய வேண்டும். மாடுகளை விற்க பாமர விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆவணங்களை திரட்டுவது சாத்தியமில்லாதது. அதனால், அவசர தேவைக்கு மாடுகளை விற்க முடியாது. பசு மாடுகள் வளர்ப்பதன் மூலம் கிராமங்களில் பிள்ளைகளை வளர்ப்பது முதல் படிக்க வைப்பது, திருமணம் வரை செய்து கொடுக்கிறார்கள்.
ஏற்கெனவே விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் ஏழ்மையில்தான் இருக்கிறார்கள். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் இன்னும் ஏழ்மைக்கு செல்ல வாய்ப்புள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT