Published : 07 Sep 2014 09:08 AM
Last Updated : 07 Sep 2014 09:08 AM
முன்னாள் அமைச்சர் ரமணாவின் குடும்ப விவகாரங்களில் தலையிட்டது, ஆவினில் நடந்த ஊழல்களில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் மாதவரம் மூர்த்தியின் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன என்கின்றனர் அதிமுகவினர்.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் பேசியபோது கிடைத்த தகவல்கள்:
ஆரம்பத்தில் இருந்தே ரமணாவுக்கு எதிராக அரசியல் செய்து வந்தார் மாதவரம் மூர்த்தி. சட்டப்பேரவைத் தேர்தலில் ரமணாவுக்கு சீட் கிடைத்தபோதே அதை மூர்த்தி விரும்பவில்லை. அப்போது, ரமணா தனது முதல் மனைவி இருப்பதை மறைத்துவிட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் என்று சிலர் பிரச்சினை கிளப்பினர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து, ரமணா வகித்து வந்த வணிக வரித்துறை அமைச்சர் பதவி மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன.
அதன்பிறகு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த ரமணா, தனது குடும்ப விவகாரங்கள் குறித்து விளக்கியுள்ளார். இந்த பிரச்சினையைக் கிளப்பி, தன் மீது வழக்கு தொடர வைத்ததின் பின்னணியில் மாதவரம் மூர்த்தி இருப்பதையும் முதல்வரிடம் கூறினார். ஆனாலும், ‘வழக்கு தீர்ப்பு வரட்டும். பார்த்துக்கொள்ளலாம்’ என்று கூறி ரமணாவை முதல்வர் அனுப்பியுள்ளார். இதற்கிடையே, ஒரு மாதத்துக்கு முன்பு ரமணா மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது.
இந்நிலையில், வழக்கு தள்ளுபடி ஆன விஷயத்துடன் மாதவரம் மூர்த்தி ஆதரவுடன் ஆவின் நிர்வாகத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் முதல்வர் அலுவலக கவனத்துக்கு ரமணா தரப்பினர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதை யடுத்து ஆவினில் நடக்கும் முறை கேடுகளை கண்டறிய முதல்வர் ரகசிய உத்தரவு பிறப்பித்தார்.
இதன் தொடர்ச்சியாகத்தான் 2 வாரங்களுக்கு முன்பு ஆவினுக்கு பால்கொண்டு வரும் கண்டெய்னர்களில் தண்ணீர் கலப்பதை சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்தனர். இந்த முறைகேட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆவினில் பியூன் வேலை பார்த்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அவரை எதிர்த்து உயர் அதிகாரிகளே வாயைத் திறக்க முடியாத நிலை இருந்தது.
தற்போது அவர் தலைமறைவாகி விட்டார். ஆனாலும், பிடிபட்ட மற்றவர்களிடம் நடந்த விசாரணையில் வேலூர் நபருக்கு பின்னணியாக இருந்ததே அமைச்சர் மூர்த்திதான் என்று தெரியவந்ததாம். இந்த விவரங்களை உளவுத் துறை போலீஸார் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பால் விநியோகம் செய்வதற்கான ரூ.6 கோடி மதிப்புள்ள டெண்டர் விவகாரத்திலும் அமைச்சர் மூர்த்தி தலையிட்டதாக முதல்வரிடம் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். இதில் குற்றச்சாட்டுகள் ஊர்ஜிதமானதால் மூர்த்தியின் அமைச்சர் பதவியுடன் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. ‘தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று விளக்கம் கொடுத்துவிட்டு, அமைதியாக காத்திருந்ததால் ரமணாவுக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT