Published : 25 Sep 2013 10:44 AM
Last Updated : 25 Sep 2013 10:44 AM
மதுரை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மதுரை மாவட்டத்தின் சிவகாசி என்று அழைக்கப்படும் கிராமம் வடக்கம்பட்டி. இந்த ஊரைச் சுற்றி சிறியதும், பெரியதுமாக நிறைய பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஊரைச் சேர்ந்த பாலுச்சாமி மகன் சின்னான், செக்கானூரணி அருகே உள்ள சிட்டம்பட்டியில் வி.பி.என். ஆனந்தம் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். ஆஸ்பெடாஸ் கூரை வேயப்பட்ட நீளமான கட்டடத்தில் செயல்படும், இந்த ஆலையில் சுமார் 50 பேர் வேலை பார்த்து வந்தனர்.
தற்போது தீபாவளி சீசன் என்பதால், இந்த ஆலையில் பட்டாசு உற்பத்தி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. வெடிக்கும் பட்டாசுகள் ஒரு புறமும், வானில் வர்ணஜாலம் காட்டும் பேன்ஸி பட்டாசுகள் மறுபுறமும் தயாராகிக் கொண்டிருந்தன. அதேபோல கரி மருந்து கலவை தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடந்தது. செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் திடீரென இந்த கட்டடத்தின் ஒரு பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது.
4 பேர் சாவு
வானமே அதிரும் வண்ணம் கட்டிடம் வெடித்துச் சிதறியதால், தாழ்வாரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். ஆஸ்பெடாஸ் சீட்டுகள் தூள்தூளாயின. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிட்டம்பட்டியைச் சேர்ந்த சின்னான் மனைவி சின்னப்பொண்ணு (35), 50 அடி தூரத்தில் கட்டடத்தின் மேற்கூரை மீது பிணமாகக் கிடந்தார். கை, கால், முகம் உள்பட அவரது உடலே சிதைந்து போய்க் காணப்பட்டது. அதேபோல கட்டடத்தில் இருந்து 25 அடி துரத்தில், முட்புதர்களுக்கு நடுவில் கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பனின் மகள் போதுமணி (25) உடல் சிதைந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். இதேபோல ஆங்காங்கே பலர் கை, கால்களை இழந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தனர். இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.
வெடிச்சத்தம் கேட்டு பக்கத்து கிராமங்களில் இருந்து பொதுமக்கள் விரைந்து வந்தனர். திருமங்கலம், செக்கானூரணி தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. காயமடைந்து உயிருக்குப் போராடிய, தங்கவேல் மனைவி பாக்கியம் (35), மாயாண்டி மகன் ஆனந்தன் (22), குருசாமி மகன் மாரியப்பன் (45), பெரியகருப்பன் மனைவி பூங்கொடி (33), குமார்(32), சுந்தர் மகன் காளிமுத்து(35) மாயான்டி மகன் பிரபு (25), முத்து மனைவி விஜயா(55) முத்தையா மகள் இந்திராணி (25), பழனியாண்டி மனைவி பாண்டியம்மாள் (28) உள்பட 19 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வரும் வழியிலேயே மாவிழிப்பட்டியைச் சேர்ந்த பிரபுவும், கிண்ணிமங்கலத்தைச் சேர்ந்த விஜயாவும் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. விபத்தில் காயமடைந்த 17 பேருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்சியர் சுப்பிரமணியம் நேரில் பார்வையிட்டு, உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு வடக்கம்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், மாணவர்கள் உள்பட 19 பேர் இறந்தனர். அந்த நிறுவன உரிமையாளரின் சகோதரர் நிறுவனத்தில்தான் தற்போது விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் லெ.சுப்பிரமணியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குனர் பொன்னுச்சாமி, மாவட்ட தீயணைப்பு அதிகாரி கருப்பையா ஆகியோர் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது ஆட்சியர் சுப்பிரமணியன் கூறுகையில், “இந்த கம்பெனியில் கடந்த வாரம்தான் ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். விதி மீறல் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இந்தக் கம்பெனி அருகே மின்நிலையம் ஒன்று செயல்பட்டு வருவதால், விபத்து அபாயம் அதிகம் இருப்பதால், இந்த கம்பெனியின் லைசென்ஸை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக சிவகாசியில் இருந்து ஒரு குழு வரவிருக்கிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT