Published : 31 Mar 2014 12:25 PM
Last Updated : 31 Mar 2014 12:25 PM
செங்கல்பட்டில் விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டக் கோரி விவசாயிகள் சிறப்பு மாநாடு ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவர் மு.மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் சுமார் 220 கி.மீ. தூரம் ஓடும் பாலாற்றின் கரையோர விவசாயிகள் ஆற்று நீரை உபயோகித்து, விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். இது கடந்த 1955-ம் ஆண்டு வரையே நீடித்தது. அதன் பின் கட்டுமானப் பணிகளுக்காக அரசாங்கத்தால் மணல் குவாரி அமைக்கப்பட்டது. விதிகளுக்கு புறம்பாக மணல் எடுக்கப்பட்டதால் பாலாற்றில் சுமார் 30 முதல் 40 அடி வரை பள்ளம் ஏற்பட்டுவிட்டது. இதனால் ஆற்று வாய்க்கால் பாசனம் அடியோடு நின்றுவிட்டது. அதனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் அத்தொழிலை விட்டுவிட்டு, பிழைப்புக்காக நகரத்தை நோக்கி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆற்றின் நடுவில் சுமார் 1000 அடிவரை ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடிநீருக்காக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்துவிட்டது.
அதனால் பாலாற்றை பாதுகாக்கும் விதமாக தடுப்பணைகளைக் கட்டக் கோரியும், காவிரி- பாலாறு, தென்பெண்ணை- பாலாறு நதிகள் இணைப்புக் கோரியும் ஏரி, குளங்களை பாதுகாக்கக் கோரியும், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் சிறப்பு மாநாடு, ஏப்ரல் 5-ம் தேதி செங்கல்பட்டில் நடைபெற உள்ளது.
மாநாட்டு மேடை, பழைய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. இதில் இந்திய பசுமை தீர்ப்பாயத் தலைவர் பி.ஜோதிமணி பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார். மேலும் விவசாய அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT