Published : 26 Jun 2017 12:06 PM
Last Updated : 26 Jun 2017 12:06 PM
ஒட்டன்சத்திரம் அருகே அத்திக்கோம்பை கிராமத்தில் நடந்த மெகா மாட்டுச்சந்தையில் நாட்டு மாடுகளை வாங்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். ஒரு வாரம் நடைபெற்ற மாட்டுச்சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.
அத்திக்கோம்பை கிராமத்தில் உச்சிகாளியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். இத்திருவிழாவின்போது மாட்டுச்சந்தை ஒரு வாரம் நடைபெறுவது வழக்கம். இதில் கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை விவசாயிகள், வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருவர்.
தற்போது 122-வது ஆண்டாக ஒரு வாரம் நடைபெற்ற மாட்டுச்சந்தையில் பல்வேறு வகையான 2,000 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் 1500-க்கும் மேற்பட்ட மாடுகள் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.2 லட்சம் வரை விற்பனையானது. மொத்தம் ரூ.3 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
இந்த மெகா மாட்டுத்தாவணிக்கு வழக்கமாக 5,000 மாடுகள் வரை விற்பனைக்கு வரும். தற்போது வறட்சி நிலவுவதால் விவசாயிகள் கால்நடைகளை ஆங்காங்கே நடைபெறும் வாரச் சந்தைகளில் விற்பனை செய்தனர். இதனால் இந்த ஆண்டு குறைவாகவே மாடுகள் விற்பனைக்கு வந்தன.
இது குறித்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரி பொன்னுச்சாமி கூறியதாவது:
இந்த ஆண்டு நாட்டு மாடுகளை வாங்க அதிகம் பேர் ஆர்வம் காட்டினர். நாட்டு மாடுகள் நல்ல விலைக்கு விற்பனையானது. 55 காங்கேயம் காளைகள், நாட்டு பசு, கன்றுக் குட்டிகளை விற்பனைக்கு கொண்டு வந்தேன். பெரும்பாலானைவை நல்ல விலைக்கு விற்றுவிட்டது என்றார்.
வியாபாரி பொன்னுச்சாமி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT