Published : 15 Feb 2017 03:44 PM
Last Updated : 15 Feb 2017 03:44 PM
அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது என்று மசூதனன் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குற்றவாளி என்று 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டார் தினகரன். அதனைத் தொடர்ந்து இன்று காலையே அவரை கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமித்து சசிகலா உத்தரவிட்டார்.
தினகரனை கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட ஒருவரை மீண்டும் கட்சியில் சேர்த்ததுடன் ஒரே நாளிலேயே அவரை துணை பொதுச் செயலாளராகவும் நியமித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து மதுசூதனன் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "அதிமுக விதிகளின்படி கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்தவர் மட்டுமே கட்சிப் பதவிக்கு தகுதியானவர். அந்த வகையில் தினகரன் அதிமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது.
மேலும் தற்காலிக பொதுச் செயலாளராக இருக்கும் சசிகலாவுக்கு, கட்சியின் பொறுப்பில் யாரையும் நியமிக்கும், நீக்கும் அதிகாரம் கிடையாது. கட்சியின் சட்டவிதிகளின்படி அவைத் தலைவரான எனக்கு மட்டுமே யாரையும் பதவியில் நியமிக்கும் உரிமை உண்டு. பொதுச் செயலாளர் இல்லாதபோது அவைத் தலைவருக்குதான் முடிவு எடுக்கும் உரிமை உள்ளது" என்றார்.
சசிகலா உங்களை கட்சியிலிருந்து நீக்கிய பின்பு நீங்கள் எப்படி பிறரை பதவியில் நியமிக்க முடியும் என்று கேட்டதற்கு, "யார் சசிகலா? நான் தான் அவருக்கு பொதுச் செயலாளர் பதவியை பரிந்துரை செய்தேன். அவர் வெறும் தற்காலிக பொதுச் செயலாளர்தான். அவர் கட்சியிலுள்ள் 1.5 கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. வெகு விரைவில் பொதுச் செயலாளரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க இருக்கிறோம். கட்சியின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு 1.5 கோடி உறுப்பினர்களின் வாக்கின் அடிப்படையில் இந்த தேர்தல் நடைபெறும்.
ஒ.பன்னீர்செல்சம் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். ஆனால் இது எங்களது தனிப்பட்ட விருப்பம்தான்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT