Published : 11 Nov 2014 10:26 AM
Last Updated : 11 Nov 2014 10:26 AM
புதிதாக தொழில் தொடங்குபவர், பாரம்பரியமாக தொழில் செய்பவர் என யாராக இருந்தாலும் இன்றைய கால மாற்றத்துக்கு தகுந்தாற்போல ஏதாவது புதுமையான, அதிலும் எளிய வழியை கையாள வேண்டியது அவசியம் என்கிறார் திருச்சியில் இளநீர் மொத்த வியாபாரம் செய்துவரும் காஜாமுகமது (56).
தன்னுடைய தொழிலில் புகுத்திய புதுமையான முயற்சி குறித்து ‘தி இந்து’விடம் அவர் பகிர்ந்துகொண்டது:
கடந்த 25 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் இருந்து இளநீர் வாங்கி வியாபாரம் செய்கிறேன். இன்றைய இளம் தலைமுறையினர் குளிர்பானம் குடிப்பதை கவுரவமாக கருதுகிறார்கள். என்னதான் இளநீர் இயற்கை பானம் என்றாலும், மரத்தடியிலும் தள்ளு வண்டியிலும் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஷாப்பிங் மால் முதல் சிறிய பெட்டிக்கடை வரை இளநீரை கொண்டுசெல்லவேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவாக இருந்தது.
அதற்கு வடிவம் கொடுக்கும் முதற்கட்ட முயற்சியாக இளநீர் மட்டையை கார்விங் செய்து நீக்கும் மூன்று இயந்திரங்களை கோவையிலிருந்து வாங்கினேன். மின் மோட்டார் உதவியுடன் இயங்கும் இந்த இயந்திரத்தின் நடுவே முழு இளநீரை வைத்து, சுழலச் செய்து கொண்டே மேல் மட்டையை நீக்கி, தலை மற்றும் அடிப்பகுதியை ரம்பம் போன்று சுழலும் இயந்திரத்தால் நறுக்கிவிடுவோம். பின்னர் சுத்தமாகக் கழுவி, மெல்லிய பாலித்தீன் பேக்கிங் செய்கிறோம். சராசரியாக 2 கிலோ எடையுள்ள இளநீர், இவ்வாறு மட்டை நீக்குவதால் 800 கிராமாக எடை குறைகிறது.
ஆரம்பத்தில் இதை, என்னிடம் இளநீர் வாங்கும் சில்லறை வியாபாரிகளிடம் விற்கக் கொடுத்தேன். முதலில் தயங்கியவர்கள், தற்போது தினமும் பச்சை இளநீருடன், இதையும் வாங்கி விற்கின்றனர். ஒரு பக்கெட்டில் 20 இளநீரை அடுக்கி பேக்கிங் செய்துள்ளேன். குளிர்பானம் விற்கும் எல்லா இடங்களிலும் இதை எளிதாக விற்கலாம். ஏற்கெனவே பாதிக்கும் மேல் மட்டை கார்விங் செய்துள்ளதால், இந்த இளநீரை துளையிட கத்தி அல்லது வீட்டில் இருக்கும் கரண்டி போதுமானது. ஃபிரிட்ஜில் வைத்தால் 20 நாட்கள் வரை கெடாது, இடத்தையும் அடைக்காது” என்றார்.
மேலும் அவர் கூறியபோது, “தாய்லாந்து நாட்டினர் இந்த வகையில் இளநீரை பேக் செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றனர். தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து என்னிடம் இந்த வகையில் இளநீர் பேக் செய்து தர ஆர்டர் கொடுத்துள்ளனர். முதற்கட்டமாக இந்தமாதம் ஒரு கன்டெய்னரில் 6 ஆயிரம் இளநீர் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. சென்னையில் இருந்து கடல் வழியாக 20 நாட்களில் ஆஸ்திரேலியாவைச் சென்றடையும்” என்றார் அவர்.
சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி யோசித்து அதற்கு செயல் வடிவம் கொடுத்ததுடன் ஆஸ்திரேலியாவுக்கு நம் ஊர் இளநீரை ஏற்றுமதி செய்யும் காஜாமுகமதுவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு மெனக்கெட்டு உருவாக்கப்படும் இந்த இளநீரை மொத்தவிலைக்கு ரூ.20-க்கு விற்கிறார். சில்லறைக் கடைகளில் இதை ரூ.25-க்கு விற்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT