Published : 23 Mar 2014 10:23 AM
Last Updated : 23 Mar 2014 10:23 AM

மதிமுக தேர்தல் அறிக்கையில் பாஜக-வுக்கு முரண்பாடான அம்சங்கள்: பொது சிவில் சட்ட எதிர்ப்பு, புலிகள் மீதான தடை நீக்கம் சாத்தியமா?

மதிமுக சனிக்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பாஜக-வின் தேசியக் கொள்கைகளுக்கு முரண்பாடான பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், பாஜக புதிய ஆட்சி அமைத்தால், மதிமுக-வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதிமுக தேர்தல் அறிக்கையில் இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு, விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதலைப் புலிகளுக்கான தடையை கடந்த காலங்களில் ஆதரித்த பாஜக, தற்போதும் விடுதலைப் புலிகளுக்கோ, தமிழீழத்துக்கோ ஆதரவு தரவில்லை. மாறாக மக்களவை பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை அதிபர் ராஜபக்சேவை நேரில் சந்தித்து, இலங்கையின் மறுவாழ்வுத் திட்டங்களைப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய ஐக்கிய நாடுகள் என்று புதிய கோரிக்கையை மதிமுக வைத்துள்ளது. கடந்த 2008-ல் சென்னையில், ’ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, ’’இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு உதவி செய்து வந்தால் இந்திய நாட்டின் ஒற்றுமை சீர்குலையும். தமிழர்களுக்கு தனிநாடு கேட்கக்கூடிய சூழலுக்கு மத்திய அரசு எங்களை தள்ள வேண்டாம்’’ என்று கருத்துத் தெரிவித்ததால், சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மீண்டும் வைகோ ’ஐக்கிய நாடுகள்’ என்ற பெயரில், மறைமுகமாக தனி நாடு கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். இதை பாஜக ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் பொடா சட்டத்தைப் போன்ற மற்றொரு சட்டவிரோத தடுப்பு முன்னெச்சரிக்கைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட வைகோ, அந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தவில்லை.

மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என பாஜக பல ஆண்டுகளாக வலியுறுத்தும் நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கூடாது என்று மதிமுக வலியுறுத்தியுள்ளது. கூடங்குளம் அணு உலையை மூட வேண்டு மென்கிறது மதிமுக தேர்தல் அறிக்கை. ஆனால், பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், கூடங்குளத்தை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஏற்கெனவே வலியுறுத்தினார்.

இப்படி மிக முக்கிய அரசிய லமைப்பு சார்ந்த கொள்கை முடிவுகளில், மதிமுக-வின் கோரிக் கைகள், பாஜகவின் தேசியக் கொள்கைகளுக்கு நேர் எதிராக உள்ளதால், ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வந்தால் மதிமுக-வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x