Published : 28 Jan 2014 10:20 AM
Last Updated : 28 Jan 2014 10:20 AM

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் களமிறங்கத் திட்டம்: தேமுதிக மற்றும் பாமக-விடம் ஆதரவு கேட்கிறது

தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு நடக்க விருக்கும் தேர்தலில் ஐந்து பேருடைய வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எஞ்சிய ஒரு இடம் வழக்கம்போல் திரிசங்கு திண்டாட்டத்தில் நிற்கிறது. 23 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட திமுக, திருச்சி சிவாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவருக்கு மமக-வின் இரண்டு எம்.எல்.ஏ.க்களும், புதிய தமிழகத்தின் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வும் ஆதரவு அளித்துள்ளனர். ஏழு அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் போக, 21 எம்.எல்.ஏ-க்களை தன் வசம் வைத்திருக்கும் தேமுதிகவும் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷை வேட்பாளராக நிறுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் தெரி விக்கிறார்கள். அதேசமயம், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில், போட்டி யிலிருந்து விலகி தேமுதிகவை திமுக ஆதரிக்கும் சூழலும் உருவாகலாம்.

ஜி.கே.வாசன் போட்டி?

இந்தநிலையில்தான் ஐந்து எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட காங்கிரஸும் மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்த ஆதரவு திரட்டுவதாகச் சொல்லப்படுகிறது. தேமுதிக ஆதரவுடன் ஜி.கே.வாசனை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தரப்பில் காய்நகர்த்திப் பார்ப்ப தாகத் தெரிகிறது. இதுதொடர்பாக விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை, காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பா.ம.க. ஆதரவு?

தேமுதிகவின் 21 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தால் காங்கிரஸின் பலமும் திமுக-வுக்கு சரிசமாக வந்துவிடும். ஆளுக்கு 26 என்ற நிலையில் பாமக-வின் ஆதரவையும் தங்களுக்குக் கேட்டு காங்கிரஸில் உள்ள ராமதாஸின் உறவினர்கள் மூலமாக திங்கள் வரை பேச்சுவார்த்தை நடந்ததாகச் சொல்கிறார்கள். வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மதியத்துக்குள் பதிலளிப்பதாக பாமக தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.

ஆறாவதாக உள்ள மாநிலங் களவை உறுப்பினர் சீட் யாருக்கு என்பதைவிட, நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் யார் கூட்டணி என்ற புதிருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் ஓரளவுக்கு விடை கிடைத்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x