Last Updated : 29 Mar, 2014 10:17 AM

 

Published : 29 Mar 2014 10:17 AM
Last Updated : 29 Mar 2014 10:17 AM

சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறப்பு: தமிழக எல்லைக்கு இன்று வந்துசேர்கிறது

சென்னையின் குடிநீர் தேவைக் காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இரு மாநில எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு இன்று (சனிக் கிழமை) வினாடிக்கு 200 கனஅடி வீதம் கிருஷ்ணா நீர் வந்துசேரும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

கோடை வெயில் சுட்டெரிக் கத் தொடங்கிவிட்டது. இத னால், சென்னையில் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்இருப்பு மிகவும் குறைவு இருப்பதால், நகரில் ஒருநாள் விட்டு ஒருநாள் சுழற்சி முறையில் 57 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப் படுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, தனியார் குடிநீர் விநியோகிப் பாளர்கள் ஒரு குடம் தண்ணீரை 5 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி. வெள்ளிக்கிழமை நிலவரப்படி இந்த ஏரிகளில் நீர் இருப்பு 3,172 மில்லியன் கனஅடிதான். கடந்த ஆண்டு இதேநாளில் 4,090 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது. மற்றொரு குடிநீர் ஏரியான வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1,456 மில்லியன் கனஅடி. தற்போது அங்கு 761 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் உள்ளது.

இதற்கிடையே, கடந்த 5-ம் தேதி கிருஷ்ணா நீர் திடீரென நிறுத்தப்பட்டதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்தது. ‘சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உடனடியாக கிருஷ்ணா நீரைத் திறந்துவிட வேண்டும்’ என்று தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, இம்மாத இறுதியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று ஆந்திர மாநில அதிகாரிகள் கூறினர். அதன்படி, கடந்த 26-ம் தேதி ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இது குறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை குடிநீர் தேவைக் காக கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. தமிழக, ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு இன்று (சனிக்கிழமை) கிருஷ்ணா நீர் வந்துசேரும். அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பூண்டி ஏரிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகலில் கிருஷ்ணா நீர் வந்துசேரும். தொடக்கத்தில் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதம் வரும் கிருஷ்ணா நீர், பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு ஆயிரம் கனஅடி வரை வரத்து இருக்கும். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கும் வரை (அக்டோபர் வரை) கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏரிகளில் கணிசமான அளவுக்கு நீர் வந்து சேர்ந்த பிறகே தினமும் சப்ளை செய்வது பற்றி முடிவு செய்யப் படும்” என்று குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x