Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM
டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, லட்சம் பேர் பங்கேற்கும் பேரணியை ஜனவரி 25-ம் தேதி நடத்தப் போவதாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறிவித்தார்.
அவர் தனது இறுதி நாட்களில் இந்தப் பேரணிக்காக ஒருமாத காலம் டெல்டா கிராமங்களில் பிரச்சாரம் செய்து மக்களைத் திரட்டினார். இதற்கான பணி களில் இருந்தபோதுதான் எதிர்பாராதவிதமாக அவரது மரணம் நிகழ்ந்துவிட்டது.
இருப்பினும் நம்மாழ்வார் அறிவித்த அதே தேதியில் பேரணியை முழுவெற்றியுடன் நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறது பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம். அதன்படி, மன்னார்குடியில் இன்று பேரணி நடத்தப்படுகிறது.
பேரணி குறித்து ‘தி இந்து’விடம் பேசிய பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தின் அமைப்பாளர் லெனின், ‘‘மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிராக மக்களைத் திரட்டும் பணியில் ஐயா நம்மாழ்வார் தன்னையே அர்பணித்துக் கொண்டார்.
உடல்நிலை ஒத்துழைக்க வில்லை; ஓய்வெடுத்துக் கொள் ளுங்கள் என்று கூறியபோது, ‘என் உயிர் பிரிந்துதான் இந்த மண் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தாராளமாக என் உயிர் போகட்டும்’என்று சொன்னார்.
அவர் இந்த மண்ணைக் காக்கத்தான் தனது உயிரை விட்டிருக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். அதனால், நாங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிக அளவில் பேரணிக்கு மக்கள் திரள்வார்கள்’’ என்றார்.
நம்மாழ்வாரின் முதன்மை சீடரான ஏங்கெல்ஸ் ராஜா கூறும்போது, ‘‘ஐயா விட்டுச்சென்ற பணியை தொடர்கிறோம். இந்தப் போராட்டத்தில் டெல்டா விவசாயிகள் கட்சிகளை மறந்து ஒன்று சேர்ந்துவிட்டனர்.
மீத்தேன் வாயு எடுப்பதால் என்ன அபாயம் ஏற்படும் என்பதை அமெரிக்கா படம் பிடித்து வெளியிட்டிருக்கிறது. அதேபோல் இங்கேயும் மீத்தேன் எடுக்க அனுமதித்தால் வீட்டுக்குழாயில் வரும் தண்ணீரிலும் நெருப்புப் பிடித்து எரியும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று நடக்கும் பேரணிக்கு அரசு தரப்பில் என்ன பதில் சொல்கிறார்களோ அதைப் பொறுத்து எங்களது அடுத்தகட்ட போராட்டம் மாநிலம் முழுக்க பரவும்’’ என்றார்.
உலக அளவில் தாக்கம்
மீத்தேன் வாயு பிரச்சினையை சுமூகமாக தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆவணப் பட இயக்குநர் செந்தமிழன் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில், ‘‘நம்மாழ்வார் மறைவுக்குப் பிறகு இந்தப் போராட்டக் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருப்பது உண்மை.
ஆனாலும் போராட்டம் நீர்த்துவிடவில்லை. இந்தப் பிரச்சினையை அரசியலாக்கி ஆதாயம் தேடாமல் நம்முடைய வாழ்வாதாரமாகப் பார்க்க வேண்டும்.
‘லட்சம் பேர் கலந்துகொள்ளும் லட்சியப் பேரணி’ என நம்மாழ்வார் அறிவித்தார். எனவே, இன்றைய பேரணி நிச்சயம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT