Published : 21 Jan 2014 09:24 AM
Last Updated : 21 Jan 2014 09:24 AM
பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்திற்கு தேவையான கரும்பு சர்க்கரை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நுழைவதால், தரம் குறைவான சர்க்கரை அனுப்பப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
‘திருவிளையாடல்’ பாணியில், ‘பிரிக்க முடியாதது எது’ என்று முருக பக்தர்களைக் கேட்டால், ‘பழநியும் பஞ்சாமிர்தமும்’ என்ற பதில் கிடைக்கும். அத்தகைய பழநி தண்டாயுதபாணியின் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தயாரிப்பதற்கு மூலப்பொருளான, கரும்பு சர்க்கரை ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வாயிலாக, விவசாயிகளிடம் இருந்து சர்க்கரை கொள்முதல் செய்யப்படுகிறது.
வாரம் 2,000 மூட்டைகள்
சராசரியாக வாரத்திற்கு 2,000 மூட்டைகள் (ஒரு மூட்டை 60 கிலோ), பஞ்சாமிர்தத்திற்காக கொள்முதல் செய்யப்படும் நிலையில், சபரிமலை சீசன், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்காலங்களில் வாரத்திற்கு 5,000 மூட்டை சர்க்கரை வரை கொள்முதல் நடந்து வருகிறது.
கவுந்தப்பாடி அமைந்துள்ள தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில், 50 ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்படு கிறது. இதில், தனியார் சர்க்கரை ஆலைக்கு வழங்கியது போக 20 முதல் 25 ஆயிரம் ஏக்கர் கரும்பு நாட்டு சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்க பயன்பட்டு வருகிறது. இந்த பகுதியில் நிலம் மற்றும் நீர்வளம் காரணமாக இங்கு விளையும் கரும்பில் தயாரிக்கப்படும் சர்க்கரையை பயன்படுத்தி பஞ்சாமிர்தம் தயாரித்தால் கூடுதல் இனிப்பும், நீண்ட நாட்கள் கெடாமலும் இருப்பதாக கூறப்படுகிறது.
பஞ்சாமிர்தத்தின் தரம்
இதனால், கடந்த 25 ஆண்டுகளாக பழநி தேவஸ்தான நிர்வாகம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வாயிலாக நேரடியாக சர்க்கரையை கொள்முதல் செய்து வருகிறது. முருகப்பெருமானின் பிரசாதத்திற்கு 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து சர்க்கரை விற்பனை செய்து வருகின்றனர்.
பிரசாதத்திற்கு செல்லும் சர்க்கரை என்பதால் புனிதம் கெடாமல் அதனை தயாரிக்கும் விவசாயிகள், தங்களது காணிக்கையாக சில மூட்டை சர்க்கரையை வழங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கவுந்தப்பாடி விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் போர்வையில் வியாபாரிகளும் நுழைந்துள்ள தால், வெளிச்சந்தையிலிருந்து வரவழைக்கப்படும் தரம் குறைவான சர்க்கரை பழநி தேவஸ்தானத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் வெளிப்படையாக சமீபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறப்படுவதாவது:
வெளிச்சந்தையிலிருந்து சர்க்கரையை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், விவசாயிகள் போர்வையில் தேவஸ்தானத்திற்கு விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
இவர்கள் மாதிரிக்காக காட்டும் சர்க்கரை தரமானதாகவும், விற்பனைக்கு வழங்கும் சர்க்கரை தரம் குறைவானதாகவும் உள்ளது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், பழநி பஞ்சாமிர்தத்தின் தரம் குறைய வாய்ப்புள்ளது.
25 ஆண்டு இறை நம்பிக்கை
ஏதாவது ஒரு வியாபாரி தரமற்ற சர்க்கரையை வழங்கியதை தேவஸ்தான நிர்வாகம் கண்டறிந்து, ஒட்டுமொத்தமாக இங்கு சர்க்கரை கொள்முதலை நிறுத்துமானால் அதனால், ஒட்டுமொத்த விவசாயி களும் பாதிக்கப்படுவர்.
இதனை வியாபாரமாக கருதாமல் 25 ஆண்டு காலமாக இறை நம்பிக்கையோடு சர்க்கரை வழங்கும் அவர்களின் மனதும் புண்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT