Published : 17 Jan 2017 10:00 AM
Last Updated : 17 Jan 2017 10:00 AM
சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.600 கோடியில் கூவம் ஆற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அதில் கழிவுநீர் விட்டு மாசுபடுத்தப்படுவதை சென்னை குடிநீர் வாரியம் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது.
கூவம் ஆறு திருவள்ளூர் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. 65 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த ஆறு, சென்னை மாநகராட்சி எல்லையில் சுமார் 20 கிலோமீட்டர் நீளத்துக்கு பயணிக்கிறது. இந்த ஆற்றை சீரமைக்க தமிழக அரசு சார்பில் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை தொடங் கப்பட்டுள்ளது. அரசு முதன்மைச் செயலர் க.பணீந்திரரெட்டி இதன் தலைவராக உள்ளார். இந்த அறக்கட்டளையில், பொதுப் பணித்துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம், ஊரக வளர்ச்சித்துறை, சென்னை குடிநீர் வாரியம், குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றின் தலைமை அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த ஆறு 3 கட்டங்களாக சீரமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக ரூ.604 கோடியில், 60 பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் அந்த ஆற்றில் கழிவுநீரை விடும் பகுதிகள் கண்டறியப்பட்டு அடைக்கப் பட்டு வருகிறது. இதுநாள் வரை கழிவுநீரை விட்டுவந்த தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகத்துக்குகூட பசுமை தீர்ப்பாயம் ரூ.40 லட்சம் அபராதம் விதித்திருந்தது. கூவம் ஆற்றில் மாசு ஏற்படுத்தியதற்காக மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தை மூடவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறு கூவம் ஆற்றை தூய்மைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், விருகம்பாக்கம் கால்வாய் வழியாக, கோயம்பேடு பாலம் அருகே, கூவம் ஆற்றில் கழிவுநீர் விடப்பட்டு வருகிறது. இதனால் கூவம் ஆறு மீண்டும் மாசடைந்து வருகிறது.
இது தொடர்பாக சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை அதிகாரிகளிடம் கேட்டபோது, விருகம்பாக்கம் கால்வாய் பொதுப் பணித்துறை பராமரிப்பில் இருந்தாலும், அதில் கழிவுநீர் விடுவோரை கண்டறிந்து எச்சரிப்பதும் மீறி கழிவுநீரை விட்டால் சம்பந்தப்பட்ட வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிப்பதும் சென்னை குடிநீர் வாரியத்தின் பணி. அதில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்க, அவ்வாரியத்துக்கு உரிய அறி வுறுத்தல்கள் வழங்கப்படும் என்றனர்.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் அலுவலகத்தில் கேட்டபோது, கோயம்பேடு பகுதியில் உருவாகும் கழிவுநீர், கோயம்பேடு மார்க்கெட் அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு தான் விருகம்பாக்கம் கால்வாயில் விடப்படுகிறது. ஆனால் போரூர் உள்ளிட்ட விரிவாக்கப்பட்ட சென்னை பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர், சுத்திகரிக்கப் படாமல் வருகிறது. அதை சுத்திகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT