Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM
சென்னையில் 5 புதிய வருவாய் வட்டங்கள் (தாலுகா) உட்பட 23 வருவாய் வட்டங்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கிவைத்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் வருவாய் கோட்டத்தையும் அவர் திறந்தார்.
சென்னையில் கடந்த டிசம்பர் 19-ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டின்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதே போல வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளின் தரம் மேம்படும் வகையிலும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்காகவும், சென்னை, வேலூர், கரூர், திருவள்ளூர், திருப்பூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக வருவாய் வட்டங்கள் உருவாக்கப்படும் என்று கடந்த ஆண்டு மே 15-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
சென்னையில் 5 புதிய வருவாய் வட்டங்கள்:
அதன்படி, புதுக்கோட்டை வருவாய்க் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக தோற்றுவிக்கப்பட்ட இலுப்பூர் வருவாய்க் கோட்டம், திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் தெற்கு வட்டங்கள், சென்னை மாவட்டத்தில் புரசைவாக்கம், அயனாவரம், அமைந்தகரை, வேளச்சேரி மற்றும் கிண்டி வட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 23 வருவாய் வட்டங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டம் மற்றும் 23 வருவாய் வட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி மூலமாக புதன்கிழமை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கோட்டம் மற்றும் 23 வட்டங்களுக்கான மொத்த செலவினத் தொகை ரூ.19.58 கோடியாகும். புதிய கோட்டம் மற்றும் வட்டங்களுக்காக 728 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
வட்டாட்சியர் கட்டிடம் திறப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டுள்ள கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம், திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.1.98 கோடியில் கட்டப்பட்டுள்ள திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் மற்றும் ரூ.2.13 கோடியில் கட்டப்பட்டுள்ள அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2 கோடியே 30 லட்சத்து 55 ஆயிரத்து 774 ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வாங்கப்பட்ட 12 சீருந்துகள் மற்றும் 21 ஜீப்புகள் என மொத்தம் 33 வாகனங்களையும் முதல்வர் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT