Published : 27 Jul 2016 02:13 PM
Last Updated : 27 Jul 2016 02:13 PM
திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 14 மாதங்களுக்குப் பின், அதிமுகவில் வீ.கருப்பசாமி பாண்டியன் இணைந்திருக்கிறார். இதன்மூலம் திருநெல்வேலி மாவட்ட அதிமுகவில் மேலும் ஓர் அதிகார மையம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவிலும், திமுகவிலும் கோலோச்சிய அரசியல்வாதிகளில் ஒருவரான கருப்பசாமிபாண்டியன், அரசியலில் பல்வேறு பின்னடை வுகளையும் சந்தித்திருக்கிறார். இம்மாவட்டத்தில் 1977-ல் ஆலங்குளம் தொகுதியிலும், 1980-ல் பாளையங்கோட்டை தொகுதி யிலும் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுகவில் இணைந்த பின் 2006-ல் தென்காசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திமுகவில் இவர் மாவட்டச் செயலாளராக இருந்தபோது, முன்னாள் சட்டப்பேரவைத் தலை வர் ஆவுடையப்பன் தலைமை யில் ஒரு கோஷ்டியும், இவரது தலைமையில் ஒரு கோஷ்டி யுமாக செயல்பட்டு வந்தனர். ‘ஆனா’ கோஷ்டி, ‘கானா’ கோஷ்டி என இவ்விரு கோஷ்டிகளையும் அழைப்பது வழக்கம்.
முதல் பின்னடைவு
திமுக தலைமையிடம் விசுவாசமாக இருந்த கருப்பசாமி பாண்டியன் மீது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியது, பெரும் பின்னடைவானது. மேலும் கடந்த மக்களவைத் தேர்தலின்போது தனது மகன் சங்கருக்கு சீட் வாங்குவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகள் எடுபடாமல்போனது. மகன் சங்கரை மாவட்டச் செயலாளராக ஆக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த கருப்பசாமிபாண்டியனை சமாதானப்படுத்தும் வகையில், அவருக்கு திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனா லும் திமுகவிலிருந்து கருப்பசாமி பாண்டியன் ஒதுங்கியே இருந்தார்.
பட்டாசு வெடித்தது
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை கருப்பசாமிபாண்டியனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதை அடுத்து, திமுகவில் இருந்து கட்டம் கட்டப்பட்டார். கடந்த ஆண்டு மே 14-ம் தேதி திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் கொடுத்தார்.
ஆனால் சட்டப்பேரவைத் தேர்த லின்போது கட்சியில் இணைய அனுமதி கிடைக்கவில்லை. ஆனாலும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டு தொடர்ந்து கடிதம் அளித்து வந்தார். கடந்த 14 மாதங்கள் காத்திருப்புக்குப் பின் மீண்டும் கருப்பசாமிபாண்டியன் அதிமுகவில் நேற்று இணைத்துக் கொள்ளப்பட்டார்.
கருப்பசாமிபாண்டியன் வருகையால் திருநெல்வேலி மாவட்டத்தில் அவரது ஆதரவாளர் கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் திருநெல்வேலி மாவட்ட அதிமுகவில் மேலும் ஓர் அதிகார மையம் உருவெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இம் மாவட்டத்தில் அதிமுகவில் முக்கிய அதிகார மையமாக இருந்த முன்னாள் எம்எல்ஏ நயினார்நாகேந்திரன், முன்னாள் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான முத்துக்கருப்பன் ஆகியோர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிமுகவில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவருமே அரசியலில் கருப்பசாமிபாண்டியனுக்கு இளையவர்கள்தான். இதனால் மூத்தவர் என்ற நிலையில் அதிமுகவில் இவருக்கென்று ஓர் அதிகார மையம் உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT