Published : 01 Sep 2016 03:26 PM
Last Updated : 01 Sep 2016 03:26 PM
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கீழகொற்கையில் மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய பிரம்மபுரீஸ்வரர் கோயில் பழமை மாறாமல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
சோழ மன்னர்களின் தலைநகரங்களில் ஒன்றான பழையாறை எனும் பகுதியை உள்ளடக்கிய கீழகொற்கையில் பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. சோழநாட்டை ஆட்சிபுரிந்த மூன்றாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1178- 1218) காலத்தில் எழுப்பிய இக்கோயில் அந்நிய படையெடுப்பாலும், கால மாற்றங்களாலும், பல விதங்களில் சீர்குலைந்து போயிருந்தது.
இக்கோயிலை சீரமைக்க வேண்டும் என பிரம்மபுரீஸ்வரர் வழிபாட்டு அறக்கட்டளையினரும் பக்தர்களும் வேண்டிக்கொண்டதன் அடிப்படையில், இந்திய தொல்பொருள் துறையின் மேற்பார்வையில் இக்கோயில் திருப்பணி கடந்த 13.11.2011-ல் தொடங்கப்பட்டது.
முழுவதும் கருங்கல் கட்டுமானங்களைக் கொண்டதாக இருந்ததால், கோயில் பழமை மாறாமல் அப்படியே புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக கோயிலில் இருந்த கருங்கற்களுக்கு குறியீடு இடப்பட்டு, பின்னர் அவை வேறு இடத்துக்கு கொண்டு சென்று, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறும்போது, “மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கட்டிய இக்கோயிலில் ஐந்து கல்வெட்டுகள் உள்ளன. குலோத்துங்கச் சோழீஸ்வரம் என்பது இந்த ஊரின் பெயர். தற்போது கீழகொற்கை என அழைக்கப்படுகிறது. தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு நன்கொடையாக இந்த ஊர் எழுதித் தரப்பட்டுள்ளது.
இக்கோயிலில்தான் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் மூன்றடி உயர சிலை உள்ளது. இந்தச் சிலையைத் தற்போது பக்தர்கள் சித்தர் சிலை என அழைப்பது வேதனை தருகிறது. இந்த கோயில் சுமார் 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்” என்றார்.
பிரம்மபுரீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வெ.ராதாகிருஷ்ணன் கூறியபோது, “மற்ற கோயில்களைப் போல இக்கோயில் திருப்பணியை உடனடியாக முடிக்க முடியாது. இக்கோயில் பழமையான சோழர்கால கோயிலாகும். கோயிலில் பல அரிய கல்வெட்டுகளும், கட்டுமானங்களும் இருந்ததால் இந்திய தொல்பொருள் துறையின் ஆலோசனையைப் பெற்று திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்கோயில் அவிட்ட நட்சத்திரத்தினர் வழிபடக்கூடிய தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் ஆவணிமாத அவிட்ட நட்சத்திரத்தன்று சிவபெருமான் பிரம்மதேவனுக்கு ஞானஉபதேசம் செய்த தலமாக போற்றப்படுகிறது. இக்கோயில் தற்போது ரூ.15 லட்சம் செலவில் பழமை மாறாமல் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT