Last Updated : 20 Mar, 2017 11:49 AM

 

Published : 20 Mar 2017 11:49 AM
Last Updated : 20 Mar 2017 11:49 AM

அமராவதி ஆற்றில் தொடரும் மணல் கொள்ளை: ஆற்றுப்படுகைகள் பாலைவனமாக மாறும் அபாயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து தொடங்கும் அமராவதி ஆறு, தாராபுரம் ஊதியூரை அடுத்த சங்கராண்டாம்பாளையம் வழியாக கரூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. அமராவதி அணை முதல் காவிரியில் கலக்கும் இடம் வரை, ஆங்காங்கே பெரிய அளவில் மணல் திட்டுகள் உள்ளன.

இந்த ஆற்றில், பல லட்சக்கணக் கான லோடு மணல் படிந்துள்ளது. மணல் படிமங்களால் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இது, ஆற்றோ ரப் பகுதிகளில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.

இந்நிலையில், அமராவதி ஆற்றில் ஆங்காங்கே மணல் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஆற்றில் தண்ணீர் வராததை சாதகமாக்கி, பல ஆயிரக்கணக்கான லோடு மணல் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

இரவு நேரங்களில், கூலி ஆட்களால் மணல் அள்ளப்பட்டு, லாரிகள் மூலமாக தாராபுரம், குண்ட டம், பல்லடம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப் படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, “மணல் கொள்ளையர்கள் இரவு 10 மணி தொடங்கி அதிகாலை 5 மணி வரை, ஒவ்வொரு லாரியிலும் 2 முறை மணல் கொண்டு சென்றுவிடுவதாக, விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆற்றின் இரு கரைகளும் வேலிகாத்தான் புதர்களால் சூழப்பட்டுள்ளது. இரவில் ஆற்றுக்குள் மணல் அள்ளுவது வெளியே தெரியாது. இது, மணல் கொள்ளையர்களுக்கு சாதகமாக உள்ளது. ஆற்றுக்குள் லாரிகள் செல்ல ஆங்காங்கே தற்காலிக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நடு ஆற்றுக்குள் மணல் அள்ளும் லாரியின் சக்கரங்கள் மணலில் புதையாமல் இருப்பதற்காக, தென்னங்கீற்றுகளை பாதைக்கு பயன்படுத்தி எளிதாக கொள்ளையடிக்கின்றனர்.

ஊதியூரை அடுத்த சங்கராண் டாம்பாளையம், வேலப்பகவுண் டன்பாளையம், புதுப்பாளையம், கோட்டை மாரியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மணலை குவித்து வருகின்றனர். பல இடங்களில், சுமார் 10 அடி ஆழத்துக்கும் மேல் மணல் எடுக்கப்பட்டு, குன்றுகளாக குவிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியில், தினமும் 4-க்கும் மேற்பட்ட லாரிகள் தலா 2 லோடு என மணலை கொள்ளையடித்துச் செல்கின்றன. மணல் கொள்ளை தொடருமானால், அடுத்த சில ஆண்டுகளில் ஆற்றுப் படுகை களில் மணல் இல்லாமல் பாலை வனமாக மாறும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x