Last Updated : 23 Mar, 2017 12:04 PM

 

Published : 23 Mar 2017 12:04 PM
Last Updated : 23 Mar 2017 12:04 PM

உயர் நீதிமன்ற உத்தரவு எதிரொலி: நன்னெறி கல்வி திட்டத்தில் திருக்குறள் சேர்ப்பு - வரும் கல்வி ஆண்டிலிருந்து அமல்

உயர் நீதிமன்றம் உத்தரவின்படி தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தின் கீழ் அறம், பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்களை பயிற்றுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் பயிற்றுவிக்கக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜரத்தினம் என்பவர் கடந்த 2015-ல் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 26.4.2016-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து திருக்குறளில் உள்ள 108 அதிகாரங்களையும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இன்பத்து ப்பாலில் உள்ள 25 அதிகாரங்கள் நீங்கலாக, அறம் மற்றும் பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங்களில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் வயது, வகுப்பை கணக்கீடு செய்து அதற்கேற்ப நன்னெறிக் கல்விக்கான திருக்குறள் பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டது.

இப்பாடத்திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசுக்கு பள்ளி கல்வி இயக்குநர் பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையை ஏற்று நன்னெறிக் கல்வி பாடத்திட்டத்தில் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் அறம் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்களை வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் என்ற முறையில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை வரும் கல்வி ஆண்டு முதல் (2017- 2018) பயிற்றுவிக்க மார்ச் 21-ல் பள்ளிக்கல்வித்துறை அரசாணை (எண் :51) பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான அரசாணையில், உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் நன்னெறிக் கருத்துக்களின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக்கதைகள், அசைவூட்டப் படங்கள் மற்றும் உலகம் முழு வதும் வாழும் தமிழர்களை சென்றடையும் விதமாக இணையவழி திருக்குறள் வளங்களை அவ்வப்போது நவீனமுறையில் உருவாக்கி உடனுக்குடன் பதிப்பித்து வெளியிடும்படி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக மேலாண்மை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x